

தமிழகத்தில் ஸ்டாலின் ஒருவர் மட்டும்தான் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இன்று நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சிகளில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''5 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 50 ஆண்டு கால சாதனையைச் செய்த மனநிறைவு உள்ளது.
நாட்டில் எல்லோருமே நிம்மதியாக வாழ்கின்றனர். ஸ்டாலின் ஒருவர்தான் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார். அவருக்குத்தான் ஆட்சிக்கு வரமுடியவில்லை. முதல்வராக முடியவில்லை என்று கவலை. அதனால் அவர் மக்களைப் பற்றிச் சொல்கிறார். திமுக ஆட்சியைப் போல, தற்போது சட்டம்- ஒழுங்கு கெடவில்லை. நில அபகரிப்பு ஏற்படவில்லை.
மின் வெட்டு இல்லை. கட்டப் பஞ்சாயத்தோ, வன்முறையோ கூட இல்லை. எவையெல்லாம் இருக்கக் கூடாதோ அவையெல்லாம் இல்லாத நிலை அதிமுக ஆட்சியில் நிலவுகிறது. இதை ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் முதல்வர் செய்து காட்டியுள்ளார்.
திரைப்படத் துறையில் ஓடிடி பிரச்சினை என்பது, நமது மாநிலத்துக்கு மட்டுமான பிரச்சினை கிடையாது. அதுவோர் உலகளாவிய பிரச்சினை. இன்றைய சூழலில் ஓடிடியைத் தவிர்க்க முடியாது. ஓடிடியைக் கட்டுப்படுத்துவது என்பது அரசின் கைகளில் இல்லை'' என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.