

நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். வழக்கமாக வெள்ளைச் சட்டையுடன் இருக்கும் ஓபிஎஸ், சமீபகாலமாக பட்டுச் சட்டையுடன் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இன்றும் இடைக்கால பட்ஜெட்டை பட்டுச் சட்டையில் வந்து தாக்கல் செய்தார். ஓபிஎஸ்ஸின் பட்டுச் சட்டை சென்டிமென்டுக்கான காரணம் பிடிபடாமல் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
ஜெயலலிதாவின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற ஓபிஎஸ், ஜெயலலிதா இரண்டு முறை பதவி விலக நேர்ந்தபோது முதல்வர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க வந்தபோது, முறைப்படி ஒதுங்கி நின்று விலகி நிதி அமைச்சராகத் தொடர்ந்தார். இதைக் காரணமாக வைத்து தன்னை பரதனாகச் சித்தரித்து ஓபிஎஸ் சார்பில் விளம்பரமும் அளிக்கப்படுகிறது.
முதல்வராக ஜெயலலிதா இருந்தவரை நிதி அமைச்சராகத் தொடர்ந்த ஓபிஎஸ் 2015-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவின் குட் புக்கிலிருந்து விலக்கப்பட்டார், அவருக்குச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவே வாய்ப்பு வழங்கப்படாது என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால், வழக்கம்போல் வாய்ப்பும் கொடுத்து அமைச்சரவையில் தனக்கு அடுத்த இடத்திலும் அமர்த்தினார் ஜெயலலிதா.
அவரது சிகிச்சை நேரத்தில் முதல்வர் பொறுப்புகளைக் கவனித்து வந்த ஓபிஎஸ், ஜெயலலிதா மறைந்த அன்றே முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க வசதியாக தனது ராஜினாமாவை அளித்து விலகினார். அதன்பின் வேகவேகமான மாற்றங்கள் நடந்தன. ஓபிஎஸ் விலகி தனித்து இயங்கினார்.
அதன்பின் மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். துணை முதல்வர், நிதி அமைச்சரானார் ஓபிஎஸ். இந்தச் சட்டப்பேரவையின் கடைசி பட்ஜெட், ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 11-வது பட்ஜெட் என இன்று இடைக்கால பட்ஜெட்டாகத் தாக்கல் செய்கிறார். இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்ய தனது இல்லத்திலிருந்து காலை 8-15 மணிக்கே ஓபிஎஸ் கிளம்பிவிட்டார். அங்கிருந்து ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள இயற்கை விநாயகர் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுத் தலைமைச் செயலகம் சென்றார்.
தலைமைச் செயலகம் சென்ற அவர் அங்கிருந்து கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு காலை 10.40 மணிக்குச் சென்றார். அவர் போகும்போது தனது வழக்கமான வெள்ளைச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுப் பட்டுச் சட்டை அணிந்து வெளியே வந்த அவர், கலைவாணர் அரங்கிற்குச் சென்றார்.
ஓபிஎஸ் சமீபகாலமாக முக்கிய நிகழ்வுகளில் பட்டுச் சட்டையுடன் பங்கேற்கிறார். சமீபத்தில் பிரதமர் மோடி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்த நிகழ்வில் முதன்முறையாக பட்டுச் சட்டையில் கலந்துகொண்டார். இன்று வீட்டிலிருந்து வெள்ளைச் சட்டையில் புறப்பட்ட அவர் சட்டப்பேரவைக்கு வரும்போது பட்டுச் சட்டையில் வந்து கலந்துகொண்டார்.
ஓபிஎஸ்ஸின் பட்டுச் சட்டை சென்டிமென்ட் மற்றவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதியின் மஞ்சள் துண்டு, ராஜேந்திர பாலாஜியின் மஞ்சள் சட்டை பாணியில் ஓபிஎஸ்ஸும் பட்டுச் சட்டைக்கு மாறியுள்ளது குறித்துப் பலரும் பல்வேறு கேள்விகளுடன் பார்த்து வருகின்றனர்.