

ஒவ்வொரு விஷயத்திலும் தமிழகத்துக்கான உரிமையைப் பறிகொடுத்தவர்தான் பழனிசாமி. மத்திய அரசைக் கேள்வி கேட்க முடியாததால் நிதிவரத்து குறைந்தது. இப்படி ஒட்டுமொத்தமாக தமிழகத்தை எழுதிக் கொடுத்துவிட்டார். அவர் பாஜகவுக்கு அடிமையாக இருக்கட்டும். ஆனால், தமிழகத்தை அடமானம் வைக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம், சேலம் மேற்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது:
“பழனிசாமி அரசு எத்தகைய அரசு என்பதை சமீபத்தில் பார்த்தோம். பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் இந்த விழுப்புரத்தில் பெண்ணையாற்றுத் தடுப்பணை உடைந்து விழுந்த காட்சி ஒன்று போதும். ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்துவிட்டது.
ரூ.25 கோடி மதிப்பிலான அணையில் எத்தனை கோடி இவர்களால் சுருட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஊழல் முறைகேடு காரணமாக அந்த அணை இடிந்து விழுந்தது. அந்த ஒப்பந்தக்காரர் மீது இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். அவை கண்துடைப்பு நடவடிக்கைகள். சில வாரங்கள் ஆனதும் அவர்களுக்கும் மீண்டும் வேலை தரப்பப்பட்டுவிடும். அந்த ஒப்பந்தகாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
கிருஷ்ணகிரி அணையின் ஷட்டரைப் புதுப்பித்து 2016-ம் ஆண்டு இந்த அரசு ஒப்படைத்தது. ஆனால், ஒழுங்காக அமைக்காததால் ஷட்டர் உடைந்தது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 35 கோடி செலவில் அணை கட்டப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், தடுப்பணை தான் கட்டினார்கள். 2015ஆம் ஆண்டு அடித்த வெள்ளத்தில் தடுப்பணையே உடைந்துவிட்டது.
இப்போது அதைச் சரிசெய்ய 20 கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள். புதிதாக 8 அணைகளைக் கட்டப் போவதாக 2019-ம் ஆண்டு அறிவித்தார்கள். இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுதான் பழனிசாமி அரசின் 'வெற்றிநடை போடும் தமிழகம்'.
இது வெற்றிநடை போடும் தமிழகம் அல்ல. இற்றுவிழும் தமிழகம். உடைந்து நொறுங்கும் தமிழகம். ஏதோ சாதனை செய்து கிழித்துவிட்டதாகப் பக்கம் பக்கமாக விளம்பரம் தரும் பழனிசாமி, கடந்த பத்தாண்டுக் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனப் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கத் தயாரா?
காவிரி காப்பான், பொன்னியின் செல்வன் என்று பட்டம் போட்டுக்கொண்டால் போதுமா? பச்சைத் துண்டு போட்டுக்கொண்டால் போதுமா? காவிரி நதியில் நம்முடைய உரிமை பறிபோனதற்குக் காரணமே பழனிசாமிதான். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, நிலத்தடி நீரைக் கணக்கில் எடுக்கக் கூடாது. குடிநீரைப் பற்றிப் பேசக் கூடாது. ஆனால், இந்த இரண்டு காரணங்களையும் காட்டி கர்நாடக மாநிலம் தனக்கு வேண்டிய அளவு நீரைப் பெற்றுக் கொண்டது.
ஆனால், இதே காரணத்தைத் தமிழகத்தின் சார்பில் சொல்லி உரிமையை நிலைநாட்டாத அரசுதான் பழனிசாமியின் அரசு. அவரால்தான் பதினான்கே முக்கால் டி.எம்.சி. தமிழகத்துக்குக் குறைந்தது. இந்த நிலையில் கூச்சம் இல்லாமல் காவிரி காப்பான் என்று பட்டம் போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தமிழகத்துக்கான உரிமையைப் பறிகொடுத்தவர்தான் பழனிசாமி. வேளாண் சட்டங்களை ஆதரித்ததால் விவசாயிகளின் உரிமை பறிபோனது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததால் சிறுபான்மையினர் உரிமை பறிபோனது. புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதால் கல்வி உரிமை பறிபோனது. நீட் தேர்வை எதிர்க்காததால் உயர்கல்வி மருத்துவ உரிமை பறிபோனது.
மத்திய அரசைக் கேள்வி கேட்க முடியாததால் நிதிவரத்து குறைந்தது. இப்படி ஒட்டுமொத்தமாக தமிழகத்தை எழுதிக் கொடுத்துவிட்டார். அவர் பாஜகவுக்கு அடிமையாக இருக்கட்டும். ஆனால், தமிழகத்தை அடமானம் வைக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை.
இதுதான் அவரது கொள்கை. தனிப்பட்ட பழனிசாமி எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். அது நமக்குப் பொருட்டல்ல. ஆனால், ஒரு நாட்டின் முதல்வர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அதற்கான எந்த இலக்கணமும் இல்லாமல் - வெறும் தலைக்கனத்தோடு மட்டுமே செயல்படும் பழனிசாமியிடம் இருந்து பதவியைப் பறிக்கும் தேர்தல்தான் இந்தத் தேர்தல். மக்கள் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.