காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைவுதான்: பாஜக தலைவர் எல்.முருகன் தகவல்

காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைவுதான்: பாஜக தலைவர் எல்.முருகன் தகவல்
Updated on
1 min read

காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைவுதான் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க கடந்த 6 ஆண்டு களாகக் கடுமையாக உழைத்தார். அவரது முயற்சியால் வட இந்தியாவில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. தென்னகத்தில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டுள்ளது.

ராகுல் செல்லும் இடமெல்லாம் காங்கிரஸுக்குத் தோல்வியே ஏற்படும். ராகுல் வந்து சென்றிருப்பதால் தமிழகத்திலும் விரைவில் காங்கிரஸ் இல்லாமலே போகும்.

பாஜகவில் திமுகவினர்

பாஜக மீது மு.க.ஸ்டாலின் தேவையில்லாமல் குற்றம்சாட்டி வருகிறார். புதுச்சேரியில் திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்துள்ளார். சொந்தக் கட்சி எம்எல்ஏவைத் தக்கவைக்க முடியாத நிலையில்தான் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் நிர்வாகம் பிடிக்காமல் திமுக நிர்வாகிகளும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உலக நாடுகள் முழுவதும் உள்ள பிரச்சினை. கடந்த காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைவுதான். விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்.

தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதை வரவேற்கும் எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை.

பாஜக தொண்டர்களையும், கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி. இதனால் சகாயம் உட்பட யார் அரசியலுக்கு வந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in