

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழைக் காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் எளிதாகப் புகுந்துவிடுகிறது. அதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சாலை போடும் ஒப்பந்ததாரர்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாததே முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் சாலை போடும்போது, பழுதடைந்த சாலையை சுரண்டிவிட்டு, புதிய சாலையை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் ஒப்பந் தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதுபோல பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மட்டத்துக்கான வரை யறை (பெஞ்ச் மார்க்) என்பது வெளிநாடுகளில் மிகவும் கண்டிப் பான நடைமுறையாக இருக்கிறது. நம் நாட்டில் இது தலைகீழாக உள்ளது.
சாலை போடும்போது பாதாள சாக்கடை மூடியை சற்று உயர்த்தி விடுகிறார்கள். அடுத்து சாலை போடும்போது அந்த மட்டத்துக்கு சாலை உயர்த்தப்படும் என்ற எண்ணத்தில் அதுபோல செய்கின்றனர். அப்படி சாலை யை உயர்த்தும்வரை சாலை விபத்துகள் தவிர்க்க முடியாத தாகிறது.
உதாரணத்துக்கு 3 ஆண்டு களில் சாலை அரை அடி முதல் முக்கால் அடி வரை உயர்த் தப்படுகிறது. அதனால் சாலையின் குறுக்கே உள்ள பாலங்களில் லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது அதன் மேற்கூரை பாலத்தை உரசிக் கொண்டு போவதைக் காணலாம்.
பொதுவாக வீடுகள் கட்டும்போது 3 அடி முதல் 5 அடி அளவுக்கு அடித்தளம் அமைக் கப்படுகிறது. சாலை மட்டம் உயர்த்தப்படுவதைக் கருத்தில் கொண்டு இப்போது 5 முதல் 6 அடி வரை அடித்தளம் போடுகின்றனர். அதனால் கட்டுமானச் செலவு அதிகரிக்கிறது. அப்படியே செலவு செய்து கட்டினாலும், அடுத்த 10 ஆண்டுகளில் சாலை மட்டம் உயர்ந்து, வீடுகளின் தரைப்பகுதி பள்ளமாகிவிடுகிறது.
இதனால், மழைக்காலங்களில் மழைநீர் எளிதாகப் புகுந்து விடுகிறது. பெருங்குடி, தரமணி, வேளச்சேரி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் சாலை உயர்ந்ததால் பள்ளத்தில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் தேங்குவதைக் காண முடி கிறது.
இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்க டாசலம் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
நீர் வழிந்தோடும் போக்குக்கு (நீரோட்டம்) ஏற்ப சாலைகளை அமைக்காவிட்டால், வீடுகளுக்குள் மழைநீர் புகுதல் உள்ளிட்ட பாதிப்புகளை தவிர்க்க முடியாது. தி.நகர் போன்ற வணிகப் பகுதிகளில் நீரோட்டத்தைக் கணக்கிட்டு சாலை போடாததால், மழைநீர் பெருமளவு தேங்குகிறது. எனவே, நீரோட்டத்தைக் கணக்கிட்டு குறிப்பிட்ட சாலையின் உயரத்தை இதற்கு மேல் உயர்த்தக்கூடாது என்று உத்தர விட வேண்டும். அந்த உத்தரவை ஒப்பந்ததாரர்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் சென்னையின் புராதனச் சின்னங்களாக கருதப்படும் கோயில்கள், மாநகராட்சி, உயர் நீதிமன்றம், சாந்தோம் பேராலயம் போன்றவை மழைநீர் தேங்கும் இடங்களாகி விடும் அபாயம் உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதேநிலைதான் என்கிறார் வெங்கடாசலம்.