வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு: 10 ஆயிரத்து 517 ஏக்கர் நிலம் பயனடையும்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள வாணியாறு அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று தண்ணீரை பாசனத்துக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியது:

வாணியாறு அணையில் இருந்து 2020-21 ஆண்டுக்கான புதிய, பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கான பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அணையின் திட்ட வரைவு விதிகளின்படி புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 4 நனைப்புக்கு 55 நாட்களுக்கும் நாளொன்றுக்கு விநாடிக்கு 90 கன அடி வீதமும், மீதமுள்ள நீரை பழைய ஆயக்கட்டு நேரடி பாசனத்துக்கு ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலும் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 10 ஆயிரத்து 517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இடதுபுறக் கால்வாய் மூலம் மோளையானூர், கோழி மேக்கானூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளும், பழைய ஆயக்கட்டு கால்வாய் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, தென்கரைக் கோட்டை, பறையப்பட்டி, சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும். இப்பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் எம் எல் ஏ-க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், அரூர் கோட்டாட்சி யர் (பொ) தணிகாசலம், பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் பரிமளா, வட்டாட்சியர் பார்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in