Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

தமிழக அரசு அறிவித்தபடி மெட்ரோ ரயிலில் கட்டணக் குறைப்பு அமல் மக்கள் உற்சாகம்; பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

தமிழக அரசு அறிவித்தபடி, சென்னை மெட்ரோ ரயில்களில் கட்டணக் குறைப்பு நேற்று அமலுக்கு வந்தது. இது பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் வடசென்னையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக செல்ல மிகவும் வசதியாக இருக்கிறது.

இருப்பினும், அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக நிர்ணயிக்கப்பட்டதால், பயணிகள் மத்தியில் தயக்கம் இருந்தது. கட்டணத்தை குறைக்குமாறு பயணிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் பழனிசாமி, மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். அதன்படி, டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்களுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டது. பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் அறிவித்தபடி மெட்ரோ ரயில் கட்டணக் குறைப்பு நேற்று அமலுக்கு வந்தது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், மெட்ரோ ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், தமிழக அரசின் கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டண விவரங்களை பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டணக் குறைப்புக்கு பிறகு மெட்ரோ ரயில்களில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தவிர, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. கடந்த 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 71 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக, புதிதாக சேவை தொடங்கியுள்ள வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் தடத்தில் மட்டும் 17 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தற்போது கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x