

நிலம் இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வழங்கி, வீடு கட்டி தரும் என்று விழுப்புரத்தில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நேற்று மாலை நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் பழனிசாமி வருகை தந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மரக்காணம் அருகே மீன்பிடி துறைமுகம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழுப்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அம்மா பூந்தோட்ட குளம்,மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாக கட்டிடம் ஆகியவைகளை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேசியது:
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் அரசு இந்த அரசாகும். எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை உள்ளதோ அங்கெல்லாம் இந்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. எத்தனை கோடி ரூபாய் என்பதை விட கோடியில் உள்ள மக்கள் பயன்பெறுகிறார்களா என்பதை தான் இந்த அரசு பார்க்கிறது. ரூ1,502.70 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டம் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 692 கிராமங்கள், 2 நகராட்சிகள் என 10 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
விவசாயிகள் பங்களிப்போடு குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டும் வகையில் ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மரக்காணம் அருகே அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ. 235 கோடி மதிப்பில் அத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த அரசு விழுப்புரம் மாவட்டத்திற்கு என்ன செய்துள்ளது என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். இந்த அரசு விழுப்புரம் மாவட்டத்திற்கு என்ன செய்துள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் புள்ளிவிவரத்தோடு தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்பு குப்பை மேடாக இருந்த பகுதியை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூங்காவுடன் கூடிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை வந்து ஸ்டாலின் பார்த்துவிட்டு பேச வேண்டும் அல்லது இப்பகுதி மக்கள் சொல்வதை போல உங்கள் பிரதிநிதி பொன்முடியை அனுப்பி இக்குளத்தை பார்க்கச் சொல்லுங்கள்.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் அமைக் கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 53 மினி கிளினிக் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி தமிழகத்தில் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.457 கோடிக்கு பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இனி வீடில்லா, நிலமில்லாவர்களுக்கு அரசே சொந்தமாக நிலம் வழங்கி கான்கிரீட் வீடும், நகர மக்களுக்கு அடுக்குமாடி வீடும் கட்டித் தரப்படும். இனி தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். தமிழகம் முழுவதும் புதிதாக 7 சட்டக்கல்லூரிகள், 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை இந்த அரசு கொண்டு வந்துள்ளது.
நந்தன் கால்வாய் சீரமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விழுப்புரம், திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகராட்சிக்கு சிறப்பு நிதி ரூ 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. கிராமத்திலிருந்து நகரம் வரை அதிக மாணவர்கள் கல்வி கற்கும் நிலையை உருவாக்கியுள்ளோம். மக்கள் துன்பப்படும் காலங்களில் எல்லாம் இந்த அரசு மக்களுக்கு கைகொடுக்கும் விதமாக செய்யப்பட்டு வருகிறது. இதன் படி கடந்த 2020 பொங்கலுக்கு ரூ.1,000, பின்பு கரோனா தொற்றின்போது ரூ.1,000, கடந்த பொங்கலுக்கு ரூ. 2,500 என ஒரே ஆண்டில் குடும்ப அட்டைக்கு ரூ. 4,500-ஐ இந்த அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை என்று பச்சையாக பொய் சொல்லி வருகிறார் இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வர வேற்றார். அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், எம்எல்ஏக்கள் குமரகுரு, பிரபு, சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் அரசு கூடுதல் செயலாளர் கோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.