பாம்பன் கடற்கரையில் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையான கோபியா மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய  40 கிலோ எடையுள்ள கோபியா மீன்.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 40 கிலோ எடையுள்ள கோபியா மீன்.
Updated on
1 min read

பாம்பனில் மீனவர்கள் வலையில் நேற்று சிக்கிய கோபியா மீன் ஒன்று ரூ.10 ஆயிரத்துக்கு விலை போனது.

பாம்பன் தென் கடல் பகுதியில் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர் வலையில் நேற்று கோபியா மீன் சிக்கியது. இந்த மீனைப் பற்றி மரைக்காயர்பட்டினம் மீன் ஆராய்ச்சியாளர் கூறியதாவது:

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் கோபியா மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து பின்னர் கடலில் கூண்டு வைத்து செயற்கை முறையில் வளர்ப்பது குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளித்தது. பின்னர் கோபியா மீன் குஞ்சுகளை கடலில் விட்டு மீன்வளத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டது. அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

கோபியா மீன்கள் இந்தியா போன்ற வெப்பப் பிரதேச நாடுகளில் மிக வேகமாக வளரும். அதிகபட்சம் 60 கிலோ வரையிலும் கூட வளரும். ஒரு கிலோ தற்போது நிலவரப்படி அதிக பட்சம் ரூ.300 வரை விலை போகும். இந்த மீன்களுக்கு உலக நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.

புரதச் சத்து நிறைந்த இந்த மீன்களை கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் போட்டி போட்டு வாங்குவதால் இதற்கான ஏற்றுமதி வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன என்றார்.

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய கோபியா மீனின் எடை 40 கிலோ. இதனை கிலோ ரூ. 250 வீதம் ரூ.10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in