

காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்காக கண்மாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரைக்குடி நகராட்சியில் 2017-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.112.5 கோடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தொடங்கின. இப்பணி 2020-ம் ஆண்டு மார்ச்சில் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை பாதி பணி கூட முடியவில்லை. மேலும் சாலையின் நடுவே ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் கூட மூடப்படாமல் உள்ளன. இந்நிலையில் தேவகோட்டை ரஸ்தா சாலையில் அமராவதி கண்மாய் அருகே பாதாளச் சாக்கடைக்காகக் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.
கண்மாய் முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளதால், குழிகளில் தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது. இதனால் குழாய்கள் பதிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமராவதி கண்மாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அமராவதி கண்மாய் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கண்மாய் மூலம் 147.30 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் கண்மாய் நிரம்பி உள்ளது. இந்நிலையில் திடீரென பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் கண்மாய் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர். இதுகுறித்து கேட்டால் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சொல்லி விட்டதாகக் கூறுகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் தண்ணீர் வற்றிவிடும். அதன்பிறகு, இப்பகுதியில் குழி தோண்டலாம். தற்போது கண்மாய் நீரை வெளியேற்றுவதை ஏற்க முடி யாது என்று கூறினர்.