

கும்பகோணத்தில் குண்டும் குழியுமாக சாலை இருந்ததால், 63 நாயன்மார்களின் இரட்டை வீதியுலா நடைபெறாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுதொடர் பாக ‘இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, ஓலைச்சப்பரத்தில் இரட்டை வீதி யுலா நடத்தப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கும்பகோணத்தில் அம்ரூத் திட் டத்தின் கீழ் புதை சாக்கடை மற்றும் குடிநீர் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று, நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. இதற்காக, சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு, முழுமையாக சீரமைக்கப் படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், கும்ப கோணத்தில் மாசிமகத் திருவிழாவின்போது, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 4-ம் நாள் விழாவில் 63 நாயன்மார்கள் இரட்டை வீதி யுலாவாக கும்பேஸ்வரர் கோயில் மற்றும் நாகேஸ்வரர் கோயிலைச் சுற்றி வருவது வழக்கம்.
ஆனால், நிகழாண்டு நாகேஸ் வரர் கோயில் தெற்கு வீதி சேத மடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டதால், கடந்த 20-ம் தேதி நடைபெற்ற 63 நாயன்மார்கள் வீதியுலா நாகேஸ்வரர் கோயிலுக்குச் செல்லாமல், கும்பேஸ் வரர் கோயிலை மட்டும் சுற்றி வந்தது. இதனால், அப் பகுதியில் உள்ள பக்தர்கள், 63 நாயன்மார்களை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இதுதொடர்பாக, ‘இந்து தமிழ்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை யடுத்து, நேற்று முன்தினம் காலை நாகேஸ்வரர் கோயில் சாலை தற்காலிமாக சீரமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆதிகும் பேஸ்வரர் கோயிலிலிருந்து, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மின் னொளி அலங்காரத்துடன் கூடிய ஓலைச்சப்பரத்தில் சுவாமி, அம்மன் தனித்தனியாக எழுந்தருளினர். தொடர்ந்து, இரட்டை வீதியுலாவாக நாகேஸ்வரர் கோயில் வீதிக்கும் ஓலைச்சப்பரங்கள் சென்றன. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, வீடு தோறும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
அதேபோல, நேற்று முன்தினம் இரவு காசிவிஸ்வநாதர், அபி முகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், கவுத மேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் உள்ள சுவாமி, அம்மனும், வைணவத் தலங்களான சக்கரபாணி, ஆதிவராக பெருமாள், ராஜகோபால சுவாமி கோயில் களிலிருந்து பெருமாள், தாயாரும் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரங்களில் எழுந்தருளி, அந்தந்த கோயில்களின் வீதிகளில் வீதியுலா கண்டருளினர். அப்போது, சுவா மிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.