Published : 22 Feb 2021 21:13 pm

Updated : 22 Feb 2021 22:34 pm

 

Published : 22 Feb 2021 09:13 PM
Last Updated : 22 Feb 2021 10:34 PM

காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை விட்டுக் கொடுத்த முதல்வர் பழனிசாமி: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மேட்டூர்

‘காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை மீட்டெடுத்த பொன்னியின் செல்வன், காவிரி காத்தான் என போஸ்டர் ஒட்டிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, 14.75 டிஎம்சி நீரை குறைவாகவே பெற்று, தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார்,’ என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலப்பட்டி ஊராட்சி 5வது மைல் பகுதியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி இன்று நடந்தது.


இதில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி வரவேற்றார். திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று, ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி அளித்தார்.

இதற்கான பெட்டியில் மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களைப் போட்டு, பூட்டி, சீல் வைத்து சாவியை திமுக தலைவர் ஸ்டாலின் வைத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு முதல் தமிழக மக்களுக்கு பயனளித்து வருகிறது.

அதேபோல, திமுக ஆட்சி காலத்தில் சோழையாறு அணை, பொன்னியாறு அணை, பெரியார் அணை, எருக்கன்பட்டி அணை நீர்த்தேக்கம் என பல அணைகளைக் கட்டி, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை செழிக்க வைத்தது, நவீன கரிகால சோழனாக இருந்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.

தமிழக முதல்வர் பழனிசாமி ஆட்சியில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட பென்னையாற்று தடுப்பணை இடிந்து விழுந்ததே, இந்த ஊழல் ஆட்சிக்கான எடுத்துக்காட்டு.

பெயரளவில் அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்த ஆளும் கட்சி, அணை கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்தார்களா என்றால் இல்லை. கிருஷ்ணகிரி அணை ஷெட்டர் உடைந்து, அதுவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கொசஸ்தலை தடுப்பணை கடந்த 2005ம் ஆண்டு இடிந்து விழுந்து, அதனை சரி செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ள அதிமுக அரசின் முறைகேடுகளை இதன் மூலம் மக்கள் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் எட்டு அணைகள் கட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறி, இன்று வரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை மீட்டெடுத்த பொன்னியின் செல்வன், காவிரி காத்தான் என போஸ்டர் ஒட்டிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, 14.75 டிஎம்சி நீரை குறைவாகவே பெற்று, தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், புதிய கல்வி சட்டம், நீட் தேர்வுக்கு அனுமதி என மக்களின் உரிமையை ஒட்டு மொத்தமாக மத்திய அரசிடம் விட்டு கொடுத்து, முதல்வர் பழனிசாமியின் கொத்தடிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழகத்தின் உரிமை விட்டு கொடுத்த, முதல்வர் பழனிசாமி, மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க எந்த உரிமையும் இல்லை. மான்புடன் நடந்து கொள்ளாத முதல்வர் பழனிசாமியின் மான்புமிகு பொறுப்புகளை வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் பறிப்பார்கள்.

முதல்வரின் தொகுதி தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று பார்த்தால் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாகுறை, அடிப்பவை வசதியில்லை.

மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாமல், தொழில் நசிவுக்கு உள்ளாகியுள்ளனர். பூலாம்பட்டியை சுற்றுலாதளமாக்குவோம் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஜவுளி பூங்கா, பாம்பழ கூழ் ஆலை என எந்த திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.

தமிழகத்தை சீரழித்த முதல்வர் பழனிசாமியின் ஆட்சி எடப்பாடி மண்ணில் இருந்தே வீழ்ச்சி துவங்கியுள்ளது. வரும் மூன்று மாதத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்போம் என்ற உறுதியை அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தவறவிடாதீர்!


காவிரி நதிநீர் பங்கீடுமுதல்வர் பழனிசாமிதிமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுதேர்தல் 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x