'வெற்றிநடை போடும் தமிழகம்' விளம்பரத்துக்குச் செலவழித்த தொகை எவ்வளவு?- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

'வெற்றிநடை போடும் தமிழகம்' விளம்பரத்துக்குச் செலவழித்த தொகை எவ்வளவு?- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
Updated on
1 min read

அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் ஆயிரம் கோடி ரூபாய்க்குச் செலவிடப்படவில்லை. ரூ.64.72 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்ற தலைப்பில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.

இந்த விளம்பரங்களுக்குத் தடைவிதிக்கக் கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வாறு வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான தொகையை அதிமுகவிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் மற்றும் ஆளும் கட்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய விளம்பரங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணையத் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் கேட்டுப் பெற்றுள்ளதாகவும், அதைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதால், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படவில்லை. ஜிஎஸ்டியுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம் ரூபாய் மட்டும் செலவிடப்பட்டது. அரசின் சாதனைகளை விளக்கி வெளியிடப்படும் இந்த விளம்பரங்களை வழங்குவது பிப்ரவரி 18-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வரவில்லை. இது சம்பந்தமாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார்.

இதை ஏற்று வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in