எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜக: வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

அதிமுக-பாஜக கூட்டணிக்கு, நடைபெற இருக்கின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை:

"பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு முதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து வருகின்றன. அருணாச்சலப் பிரதேசம், கோவா, நாகாலாந்து, கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பெரும்பான்மை பலத்துடன் நடைபெற்ற எதிர்க்கட்சி அரசுகளை, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக் கவிழ்த்தனர்; பாஜக அரசு அமைத்தனர். இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலுக்கு, ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, அரசியலமைப்புச் சட்ட நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில், புதுச்சேரி மாநிலத்தில், திமுக ஆதரவுடன், பெரும்பான்மை பலத்துடன் இயங்கிய நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை, தரம் தாழ்ந்த முறையில் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல், நாராயணசாமி அரசுக்கு நாள்தோறும் தொல்லைகள் கொடுத்து வந்தார். மக்களாட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்தார். அதனால், புதுச்சேரி மக்களின் கடுங்கோபத்திற்கும், வெறுப்புக்கும் ஆளான கிரண்பேடியை நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையையும் செய்து முடித்திருக்கின்றனர்.

இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், மக்களைச் சந்தித்து, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதைக் கைவிட்டுவிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள். அதிமுக கைகட்டி சேவகம் செய்கின்றது. அவர்களுடைய கூட்டணிக்கு, நடைபெற இருக்கின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in