பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைத்த அசாம் அரசு; தமிழகமும் குறைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைத்த அசாம் அரசு; தமிழகமும் குறைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 
Updated on
1 min read

மற்ற மாநிலங்களைப் பின்பற்றி, மாநில அரசின் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைத் தமிழக அரசு குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்க மத்திய அரசு அனுமதித்ததால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ எட்டிவிட்டது. டீசல் விலை ரூ.90-ஐ நெருங்கிவிட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசலின் விலை உலகச் சந்தையில் மிகக்குறைவாக உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டு பெட்ரோலியப் பொருட்களின் மீது, செஸ், வாட் வரி எனப் பல வரிகளைப் போட்டதால் 3 மடங்குக்கு மேல் கூடுதலாக லிட்டருக்கான தொகையை பொதுமக்கள் கொடுக்கின்றனர்.

அதேபோன்று கேஸ் சிலிண்டர் விலையும் கடந்த எட்டு மாதங்களில் 215 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பல மாநிலங்கள் தங்களது வரியைக் குறைத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைத்துள்ளது. தமிழகமும் அதேபோன்று குறைக்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“பெட்ரோல் , டீசல் விலை உயர்வு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இதனுடைய விலை உயரும்போது விலைவாசி உயர்கிறது. அதாவது உயர் வகுப்பினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என அனைவரையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

இதனால் பேருந்துக் கட்டணம் கூடும். உணவுப்பொருட்கள் விலை கூடும். மளிகைப் பொருட்கள் விலை கூடும். காய்கறிகள் விலை கூடும். எனவேதான் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டியுள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு வரியைக் குறைத்து, லிட்டருக்கு 5 ரூபாய் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறது.

அந்தக் கட்சியுடன் கூட்டணியாக இருக்கும் முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதேபோல் பெட்ரோல் விலை முன்பு உயர்ந்தபோது, 2018-இல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், வரியைக் குறைத்தார். அதன் மூலம் பெட்ரோல் - டீசல் விலையையும் குறைத்தார். தற்போது மேற்கு வங்க அரசும் வரியைக் குறைத்துள்ளது.

ஆகவே பழனிசாமியும் கரோனா காலத்தில் அவரே உயர்த்திய வரியையாவது இப்போது குறைத்து, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in