

புதுச்சேரி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இயலாமல் கவிழ்ந்து, நாராயணசாமி ராஜினாமா கடிதத்தைத் தந்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. பிரதமர் புதுச்சேரி வரவுள்ள சூழலில், அடுத்தகட்டத் திருப்பங்களுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
புதுவை காங்கிரஸ் அரசு இன்று (பிப். 22) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க உரிமை கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பில் கருத்துகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பளார் நிர்மல்குமார் சுரானா, என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமியை நேரு வீதியில் உள்ள அலுவலகத்துக்கு வந்து இன்று நண்பகல் சந்தித்தார். அப்போது, இருவரும் தனிமையில் சுமார் 20 நிமிடம் பேசிக்கொண்டனர். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து, கூட்டணியிலுள்ள அதிமுக சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏவிடம் கேட்டதற்கு, "அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் அமர்ந்து பேசி முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, "கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும்" என்று கூறினார்.
அரசியல் வட்டாரங்களில் பேசியதற்கு, "கடந்த முறை பிரதமர் மோடி வந்தபோது புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு இருந்தது. வரும் 25-ல் புதுச்சேரிக்கு மோடி வரும்போது காங்கிரஸ் அரசு இல்லாத சூழலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆதரவுடன் பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோரும் வாய்ப்பும் உள்ளது. பத்து நாட்களில் ரேஷன் கடை திறப்பு தொடங்கி, முக்கிய நிதி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது, நலத்திட்டங்களைச் செயல்படுத்திவிட்டு வரும் தேர்தலைச் சந்திக்கும் திட்டமும் பாஜக கூட்டணிக்கு உள்ளது" என்கின்றனர்.
ஓரிரு நாட்களில் இதற்கான விவரங்கள் தெரியவர வாய்ப்புள்ளது.