குறைகூறியே ஆட்சி நடத்தினார் நாராயணசாமி; வரும் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்திக்கும்: எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பேட்டி

சட்டப்பேரவை வளாகத்தில் ரங்கசாமி. |  படம்: எம்.சாம்ராஜ்
சட்டப்பேரவை வளாகத்தில் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் குறை கூறியே ஆட்சி நடத்தினார் நாராயணசாமி என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று (பிப். 22) காங்கிரஸ் அரசு கவிழ்ந்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ரங்கசாமி கூறியதாவது:

"காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானம் படுதோல்வி அடைந்தது. தீர்மானத்தில் பேசிய முதல்வர், தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கூறாமல், மத்திய அரசைக் குறை கூறியே பேசினார். புதுவை மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும், அதில் எவை நிறைவேற்றப்பட்டன என்பதைத்தான் அவர் கூறியிருக்க வேண்டும்.

நாராயணசாமி தனது அரசின் செயல்பாட்டைக் கூறாமல் மத்திய அரசு மீது மட்டுமே குறை கூறினார். நாராயணசாமி செயல்பாடு மீது நம்பிக்கையின்றிதான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தோம். அது காங்கிரஸ் அரசுக்குப் படுதோல்வியை அளித்துள்ளது.

காங்கிரஸ் அரசு அரும்பார்த்தபுரம் மேம்பாலம் திறந்ததாகக் கூறியது. அப்பாலம் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கட்டத் தொடங்கியது என்பதும், அத்திட்டம் நாங்கள் கொண்டுவந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். தற்போது கட்டி முடித்த பாலத்தைத் திறந்துள்ளார்கள். ரொட்டி, பால் திட்டம் நாராயணசாமியால்தான் தோல்வியடைந்தது. அத்திட்டத்துக்கு யார் பெயர் மாற்றம் செய்தது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தரவில்லை. சைக்கிள், லேப்டாப் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்களை நாராயணசாமி எதிர்த்துப் பேசியுள்ளதற்கு ஆதாரம் உள்ளது.

புதிய திட்டங்களைக் கொண்டுவராமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் குறைகூறி நாராயணசாமி ஆட்சி நடத்தினார். நாராயணசாமியின் முழு நேரமும் அரசியல் செய்வதில்தான் இருந்தது. வரும் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்திக்கும்".

இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in