Last Updated : 22 Feb, 2021 01:42 PM

 

Published : 22 Feb 2021 01:42 PM
Last Updated : 22 Feb 2021 01:42 PM

குழந்தையின் உணவுக்குழாயில் திறந்த நிலையில் சிக்கிய 'பின்னூசி': பாதுகாப்பாக வெளியே எடுத்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

எக்ஸ்-ரேவில் தெரியும் உணவுக்குழாயில் சிக்கிய பின்னூசி.

கோவை

குழந்தையின் உணவுக்குழாயில் திறந்த நிலையில் சிக்கிய 'பின்னூசி'யை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தெக்கலுார் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய ஒரு வயதுக் குழந்தை நித்தீஷ். மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு, அழுதுகொண்டே இருந்தது. குழந்தையை கோவை அரசு மருத்துவனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்துள்ளனர். துறைத் தலைவர் அலி சுல்தான் தலைமையிலான மருத்துவர்கள், எக்ஸ்-ரே மற்றும் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் உணவுக்குழாயில், திறந்த நிலையில் பின்னுாசி ஒன்று குத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக, மயக்கவியல் துறை மருத்துவர் மணிமொழிசெல்வன் உதவியுடன், இரைப்பை, குடல், கல்லீரல் துறை உதவிப் பேராசியர் மருத்துவர் வி.அருள்செல்வன் தலைமையிலான குழுவினர், பின்னுாசியை அறுவை சிகிச்சையின்றி 'எண்டோஸ்கோபி' மூலம் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். சிகிச்சை முடிந்து குழந்தை நலமுடன் வீடு திரும்பியுள்ளது.

வெளியே எடுக்கப்பட்ட பின்னூசி.

இது தொடர்பாக, மருத்துவர் அருள்செல்வன் கூறுகையில், ''எதை வேண்டுமானாலும் வாயில் வைத்துக்கொள்ளும் சுபாவம் குழந்தைகளுக்கு இயல்பாக இருக்கும். அவ்வாறு பொம்மைகளில் உள்ள பட்டன், பேட்டரி, பின்னூசி, குண்டூசி, சட்டை பட்டன்கள், ஊக்குகள், நாணயங்கள் போன்றவற்றை வாயில் வைக்கும்போது, 'வழுவழு'வென இருக்கும் என்பதால் எளிதாக உணவுக்குழாய், மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும்.

எனவே, குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர்கள் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, நிலக்கடலை, பட்டாணி, மக்காச்சோளம், சிறு கற்கள் போன்ற பொருட்களை வாயில் போட்டுக் கொள்ளாமல் தடுக்க வேண்டும். இயல்பான குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ, சாப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x