Published : 22 Feb 2021 11:37 AM
Last Updated : 22 Feb 2021 11:37 AM

நாராயணசாமியைக் கைவிட்டதா திமுக தலைமை? கடைசி நேரத்தில் காலை வாரிய திமுக எம்எல்ஏ

புதுவை

புதுவையில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களே ஈடுபட்ட நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் தன் பங்குக்குக் காலை வாரியுள்ளார். இதனால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி பெரும்பான்மையை இழந்தது புதுவை காங்கிரஸ் அரசு.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் திமுக தலைமையின் ஆலோசனை பெறாமல் ராஜினாமா செய்தாரா? அப்படிச் செய்திருந்தால் திமுக தலைமை அவரை நீக்காமல் மவுனம் காப்பது ஏன் என்கிற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக உள்ளது.

மகாபாரதத்தில் கர்ணன் மிகப்பெரிய வீரன் வெல்ல முடியாதவன் என்கிற நிலையில் கிருஷ்ண பரமாத்மா பல வகைகளில் கர்ணனை பலவீனப்படுத்துவார். இவற்றால் கவச குண்டலம் இழப்பு, நாகாஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவது, அர்ஜுனனைத் தவிர யாரையும் கொல்லமாட்டேன் என பல தானங்கள், வரங்கள் மூலம் கர்ணன் இழக்கும் பலம் கர்ணனுக்கே தெரியாத அளவுக்கு வலை பின்னப்படும்.

இதில் முத்தாய்ப்பாக யுத்த களத்தில் தேரைச் செலுத்தும் சல்லியன் கர்ணனை விட்டுப் பிரிவதும் அதனால் தேர்ச்சக்கரம் மண்ணில் புதைவதும் கர்ணனின் இறுதி வீழ்ச்சியாக இருக்கும். அதேபோன்று புதுவை அரசின் வீழ்ச்சி காங்கிரஸுக்குள்ளேயும், வெளியில் எதிர்க்கட்சிகளாலும் தொடங்கியது.

ஆனாலும், புதுவை அரசு கவிழக்கூடிய சூழ்நிலை இல்லை, ஆட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது என முதல்வர் நாராயணசாமி கூறி வந்தார். அதில் உண்மையும் இருந்தது. ஆனால், நேற்று மாலை காங்கிரஸின் மற்றொரு உறுப்பினரும் ராஜினாமா செய்ய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13 ஆகக் குறைந்தது. இந்த நேரத்தில்தான் புதிய ட்விஸ்ட்டாக தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசனின் ராஜினாமா அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாராயணசாமி மீது அதிருப்தியால் வெளியேறுகின்றனர் என்றால் திமுக உறுப்பினர் எப்படி ராஜினாமா செய்வார்? இந்த விவகாரத்தில் திமுக உறுப்பினர் தலைமையை மீறி எப்படி ராஜினாமா செய்தார், அவ்வாறு அவர் ராஜினாமா செய்திருந்தால் அவர் மீது கட்சி நடவடிக்கை வந்திருக்கும், ஆனால் திமுக தலைமை மவுனமாக உள்ளது ஏன் என அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

புதுவையில் திமுக-காங்கிரஸ் உறவு சமீபகாலமாக வலுவான நிலையில் இல்லை என்பது அவ்வப்போது எழும் பிரச்சினைகளில் வெளிப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதுவை திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் திமுக 30 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்லும் எனப் பேசியதும் காங்கிரஸ்- திமுக கூட்டணி குறித்த கேள்வியை பலர் மத்தியில் எழுப்பியது.

இந்நிலையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக்குச் சிக்கல் வந்துள்ள நிலையில் திமுக உறுப்பினர் ராஜினாமா செய்ததன் மூலம் மேலும் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சிக்குத் துணையாக இருந்தாலும் வெங்கடேசனின் ராஜினாமா முக்கியமான நேரத்தில் நெருக்கடியைக் கொடுத்ததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

ராஜினாமா மட்டும்தான் செய்தேன், திமுகவை விட்டுப் போகவில்லை என வெங்கடேசன் சொல்வதும், அவர் மீது நடவடிக்கை எதுவும் இல்லாததுமான திமுகவின் மவுனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தான் ராஜினாமா செய்ததை திமுக தலைமைக்குத் தெரிவித்துவிட்டதாக வெங்கடேசன் நேற்று பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ராஜினாமா செய்யும் முன் திமுக எம்எல்ஏ, கட்சியின் மேலிடத்திடம் தகவல் சொல்லிவிட்டேன் எனப் பேட்டி அளிக்கும் நிலையில், அவர் ஆலோசனை பெற்றுத்தான் செய்தாரா? பெறாமல் தன்னிச்சையாகச் செய்தாரா என்பதை திமுக தலைமை தெரிவிக்காதவரையில் புதுவையில் திமுகவின் நிலைப்பாடு அரசியல் விமர்சகர்கள் இடையே விமர்சனத்துள்ளாகி வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x