

புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசியபோது அதிமுகவினர் குறுக்கிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின.
இதனால், துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி சட்டப்பேரவையில் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். காலை 10.00 மணிக்கு அவை கூடியவுடன் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசையும் கிரண்பேடியையும் சரமாரியாக வசைபாடினர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரின் பேச்சு தொடர்ந்த நிலையில், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கந்தசாமி அடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விடிய விடிய பேசுவோம் என்றார். வாக்குவாதம் முற்றியதால் சபாநாயகர் தலையிட்டு முதல்வர் பேச்சுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது எனக் கண்டனம் தெரிவித்தார். இதனால், முதல்வர் நாராயணசாமி சிறிய இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் உரையைத் தொடர்ந்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்போதைய நிலவரப்படி, ஆளுங்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 9, திமுக-2, சுயேட்சை 1 என 12 பேரே உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக)-3 என 14 பேர் உள்ளனர்.