

புதுச்சேரியில் மக்கள் அரசு செயல்படாமல் தடுக்கக் கிரண்பேடியை ஆளுநராக நியமித்திருந்த மத்திய அரசு, மக்கள் அரசை நீக்க ஆளுநராகத் தமிழிசையை நியமித்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காங்கிரஸில் 15, திமுகவில் 3, சுயேச்சை எம்எல்ஏ என 19 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸிலிருந்து தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.தொடர்ந்து நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, திமுக எம்எல்ஏவான வெங்கடேசனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே புதுச்சேரி அரசின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை செளந்தரராஜன், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ''பாரதிய ஜனதா கட்சி, புதுச்சேரியின் மக்கள் அரசாங்கத்தைக் கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட விடாமல் தடுத்து வந்தது. அதற்குக் கிரண்பேடியைப் பயன்படுத்தினார்கள்.
தற்போது அந்த அரசையே நீக்குவதற்குத் தமிழிசையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதைத் தவிர அதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை. இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் புறம்பான மிகத் தவறான செயல். மக்களால் மன்னிக்க முடியாத தவறை மோடி அரசு செய்துள்ளது.
ஆளுநர் தமிழிசையின் செயலால், அங்கு காங்கிரஸ் இன்னும் வலுவடையும். மாபெரும் இயக்கமாக மாறும். மீண்டும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அதுதான் அங்கு நடக்கும்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.