

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக நினைப்பது வருத்தம் அளிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையடையச் செய்துள்ளது. சாமானிய மக்களின் மீது மத்திய அரசு பொருளாதார யுத்தத்தை மேற்கொண்டிருப்பதாக கருதுகிறோம்.
அதிமுக கூட்டணியில் இருந்து ஏற்கெனவே நாங்கள் வெளியேறிவிட்ட நிலையில், மீண்டும் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு கிடையாது. தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து பிப்.25-ம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.