

தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால், சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் இறப்பு விகிதம் 54 சதவீதம் குறைந்துள்ளது.
சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் முன்னணியில் இருந்தது. இதைக் குறைக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி தமிழக அரசு போக்குவரத்து, காவல் துறை, சுகாதாரத் துறை உட்பட பல்வேறு துறைகளோடு இணைந்து பணியாற்றி வருகிறது. இதனால், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் 17,218-ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2020-ல்8,060-ஆக குறைந்துள்ளது. இதன்படி விபத்துகளின் எண்ணிக்கை 54 சதவீதம் குறைந்தது. இது தமிழக அரசின் சாதனையாக இருக்கிறது.
அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிக பாரம் ஏற்றுதல், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவை விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன. மற்ற காரணங்களைக் காட்டிலும் ஓட்டுநர்களின் கவனக்குறைவே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன. எனவே, சாலை விதி மீறல்கள் குறித்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீஸார், ஆர்டிஓகள் மூலம் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தின்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-ல் 1,56,694, 2018-ல் 3,35,152, 2019-ல் 1,13,533, 2020-ல் 1,08,257 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைக்க சாலை பாதுகாப்பு நிதி மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து வேகத்தடை அமைத்தல், தடுப்புகள் அமைத்தல், சிகப்பு ஒளிர்பட்டைகள் அமைத்தல் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து, காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து பணியாற்றி வருவதால் சாலை விபத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவது கணிசமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 2016-ல் 17,218 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை 2020-ல் 8060 ஆக குறைந்துள்ளது. நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் 54 சதவீதமாக உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து உயிரிழப்பு குறைப்பதில் தமிழகம் கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளுக்கான மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும், படிப்படியாக ஊரங்கு தளர்வு காலங்களில் தனியார், சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து, உயிரிழப்புகளும் திடீரென அதிகரித்தன. மீண்டும் பொதுபோக்கவரத்து வசதி தொடங்கிய பிறகு, விபத்துக்கள், உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்தன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்க தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.