

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராய ணனின் (கி.ரா.) `மிச்சக் கதைகள்' நூல் வெளியீட்டு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. டமருகம் கற்றல் மைய ஒருங்கிணைப்பாளர் ஜான்சுந்தர் வரவேற்றார். கோவை புத்தகத் திருவிழா தலைவர் பா.விஜய்ஆனந்த் தொடக்க உரையாற்றினார்.
எழுத்தாளர் ஜெயமோகன் நூலை வெளியிட, எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெற்றுக் கொண்டார். விழாவில் நாஞ்சில்நாடன் பேசும்போது, "வட்டார வழக்குஇல்லாமல், மண்ணின் மைந்தருடைய மொழியைப் பேசாமல் எழுத வேண்டுமென்றால், மறைமலை அடிகள், மு.வரதராசனார், அகிலன் போன்றுதான் எழுத வேண்டும்.
மக்கள் மொழி என்பது மொழிக்கிடங்கு. இந்தப் புத்தகத்தில் ஓரிடத்தில் நிறப்பிழை என்று கி.ரா. குறிப்பிட்டுள்ளார். நிறத்தில் மாறுபாடு தெரிவதுதான் நிறப்பிழை. இவ்வாறு சொற்களைப் பயன்படுத்தக்கூடிய இலக்கியவாதி களை, நாம் வட்டார வழக்கு எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்துகிறோம். ஒரு சொல் குறித்து நமக்கு அறிமுகம் இல்லையென்பதால், அதை வட்டார வழக்கு என்று கூறுவது கி.ரா. போன்றவர்களை சிறுமைப்படுத்துவதாகும். பாரதரத்னாவைக் காட்டிலும் உயர்ந்தவிருது கி.ரா.வுக்கு வழங்கப்பட்டி ருக்க வேண்டும். அவரது மதிப்பு அரசுக்குத் தெரியவில்லை" என்றார்.
கதை சொல்லி காலாண்டிதழ் இணையாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, "கரிசல்காட்டின் அடையாளம் கி.ரா. இன்னும் 108 வயது வரை இருப்பேன்என்று அவரே நூலில் தெரிவித்துள் ளார். எனவே ‘தொடரும் கதைகள்’என இந்நூலுக்கு பெயர் வைத்திருக்க வேண்டும். இலக்கியத் தளத்துக்கு அவரது பங்களிப்பு இன்னும் அதிகம் வேண்டியிருக்கிறது.
டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்
விவசாயி, வேளாண் போராட்டங்களில் பங்கேற்றவர், படைப்பாளி என பல்வேறு அடையாளங்கள் கி.ரா.வுக்கு உண்டு. நாட்டுப்புறவியல், வட்டார வழக்குச் சொல் அகராதி போன்றவற்றுக்கு வழிகாட்டியவர் அவர். நாட்டுப்புறவியலும் ஓர் இலக்கியத் தளம்தான்.
நம் பண்பாடு, கலாச்சாரத்தைக் கூறும் முக்கிய தரவு நாட்டுப்புற வியல். வழிவழியாக இதைக் கொண்டுசெல்ல வேண்டும். யார் யாருக்கோ டாக்டர் பட்டம் தருகின்றனர். ஆனால், கி.ராவுக்கு இதுவரை டாக்டர் பட்டம் தரப்படவில்லை. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென 1980-களிலேயே நான் வலியுறுத்தியுள்ளேன். எல்லா பல்கலைக் கழகங்களும் கி.ரா. பற்றிய இருக்கையை அமைக்க வேண்டும்" என்றார்.
வயோதிகம் காரணமாக இந்நிகழ்ச்சியில் கி.ரா. பங்கேற்கவில்லை. அவரது மகன் கி.ரா.பிரபி, எழுத்தாளர் புதுவை இளவேனில், ராக் அமைப்பு தலைவர் ரவீந்திரன் மற்றும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.