

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி ஆசை இருக்கலாம், ஆனால் வெறித்தனம் கூடாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் புதிதாக நிறுவப்பட்ட முழு உருவ காந்தி சிலை, ரவுண்டானா அருகே நிறுவப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை முதல்வர் பழனிசாமி பிரச்சார வேனில் இருந்தபடி நேற்று திறந்து வைத்து, 100 அடிஉயர கம்பத்தில் அதிமுக கொடியைஏற்றி வைத்து பேசியது:
நாட்டிலேயே சட்டம், ஒழுங்கு சிறப்பான மாநிலம் தமிழகம்தான். ‘நான் சொல்வதைத்தான் அவர் செய்கிறார்’ என என்னைப் பார்த்து ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதானே.
ஸ்டாலினுக்கு எந்தத் திறமையும் கிடையாது. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அவருக்கு கொடுக்கலாம். தற்போது பெட்டி ஒன்றை எடுத்துச் சென்று அதில் மனுக்களைப் பெற்று வருகிறார். அதில் ஏற்கெனவே தயாராகஉள்ள பதில்களை ஆள்மாற்றி படித்துக் காட்டி வருகிறார். 30 ஆண்டுக்கு முன்பு உள்ளதுபோல இப்போது கிடையாது. அனைத்தையும் மக்கள் ‘லைவ்வாக’ பார்க்கின்றனர். மக்களை ஏமாற்ற முடியாது.
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் திமுக தலைவரும், அக்கட்சியினரும் கோரப்பசியில் உள்ளனர். மக்கள் வாக்களித்தால்தான் முதல்வராக முடியும். நான் என்னைஎப்போதும் முதல்வர் என நினைத்தது கிடையாது. மக்கள்தான் முதல்வர்.
ஸ்டாலின் முதல்வராகவே கனவுகண்டு கொண்டுள்ளார். ஏதேனும் தில்லுமுல்லு செய்துவிடுவார்களோ என பயமாக உள்ளது. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி ஆசை இருக்கலாம். ஆனால் வெறித்தனம் கூடாது என்றார்.
அப்போது, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் முதல்வர் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து விவசாயிகள் சார்பில் வாங்கலில் நடைபெற்ற பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்றார்.