Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

கோவை ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்: சிறந்த வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள் பரிசு

கோவை மாவட்டத்தில் 1979-ம் ஆண்டுக்குப் பிறகு 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலை அருகே 25 ஏக்கர் பரப்பில், கோவை மாவட்ட நிர்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் 4-வது ஆண்டாக நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை முதலே காளைகளுக்கும், வீரர்களுக்கும் விதிமுறைகளின்படி உடல் தகுதி, பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு மீதான ஆர்வத்தால் காலை முதலே கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். வாடிவாசலில் வழிபாடு நடத்தி, உறுதிமொழி ஏற்ற பிறகு, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து போட்டியைத் தொடங்கிவைத்தார்.

அவர் பேசும்போது, ‘‘அனைத்து மாவட்டங்களைக் காட்டிலும் கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தி வருகிறோம். கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அதிக காளைகள் கலந்துகொள்வது ஆரோக்கியமான விஷயம். பொதுவாக, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில்தான் ஜல்லிக்கட்டு பிரபலம். தற்போது கோவை மக்களும் நாட்டுமாடு வளர்க்கிறார்கள். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். நமது பாரம்பரியத்தை மீட்டெடுத்து இருக்கிறோம் என்பது இதில் நிரூபணமாகிறது” என்றார்.

அதைத் தொடர்ந்து, வரிசையாக காளைகள் களம் கண்டன. மூக்கணாங்கயிறு வெட்டப்பட்டதும் வாடிவாசலில் இருந்து கிளம்பிய பல காளைகள், எதிரே இருந்த வீரர்கள் யாருக்கும் பிடிகொடுக்காமல் சென்றன. சீறி வந்த காளைகளின் திமிலை விடாமல் பிடித்த வீரர்கள், வெற்றி பெற்றனர். காளைகளைப் பிடித்த அனைத்து வீரர்கள் மற்றும் பிடிபடாத அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டன. பார்வையாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

956 காளைகள் பங்கேற்பு

மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 956 காளைகள் இப்போட்டியில் பங்கேற்றன. சுமார் 750 மாடுபிடிவீரர்கள் கலந்துகொண்டனர். மாலை 6.40-க்கு போட்டி நிறைவடைந்ததால், அவிழ்க்க முடியாத 100 காளைகளுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டது.

நிறைவு விழாவில், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்பாண்டியன், கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கத் தலைவர் எஸ்.பி.அன்பரசன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ஜுனன், வி.சி.ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, ஓ.கே.சின்னராஜ், வி.பி.கந்தசாமி, நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் சுமார் 2,000 போலீஸார், ஊர்க் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கால்நடை பராமரிப்புத் துறை குழுக்கள், மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x