Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

சென்னை புத்தகக் காட்சியின் அறிமுக நிகழ்ச்சியாக ‘ரன் டூ ரீட்’ மித ஓட்டம்: காவல் துறை கூடுதல் டிஜிபி தொடங்கி வைத்தார்

சென்னை புத்தகக் காட்சியின் அறிமுக நிகழ்ச்சியாக, ‘ரன் டூ ரீட்’ மித ஓட்டம் நடைபெற்றது. தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இதைத் தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 44-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப். 24 முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, வாசிப்பை பரவலாக்க ‘ரன் டூ ரீட்’ என்ற மித ஓட்டம் (மினி மாரத்தான்) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று காலை நடைபெற்றது. இதை காவல் துறை கூடுதல் டிஜிபி (செயலாக்கம்) ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், “வாழ்வில் அனைவருக்கும் படிப்பறிவு அவசியம் தேவை. சென்னை புத்தகக் காட்சி அறிவை வளர்த்துக் கொள்ள துடிப்பவர்களுக்கு சிறந்த இடம். எனவே அனைவரும் சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்று பயனடைய வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான ஏஐஜி ஆர்.திருநாவுக்கரசு பேசும்போது, “ஓடுவது உடலை வலுப்படுத்தும். படிப்பது உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்வை ஏற்படுத்தும். உங்களது உள்ளத்தை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் புத்தகங்களைப் படியுங்கள் ” என்றார்.

பபாசி தலைவர் ஆர்.எஸ். சண்முகம் பேசும்போது, “கடந்த ஓர் ஆண்டாக பெருந்தொற்று காரணமாக நலிவுற்று இருந்த தொழில் மட்டுமின்றி மக்களும் மன எழுச்சி பெறவேண்டும் என்ற நோக்கதோடு வரும் 24-ம் தேதி 44-வது புத்தகத் திருவிழா தொடங்க உள்ளோம். இதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். தொடக்க நிகழ்ச்சியின் அறிமுகமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம்’ என்றார். நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன், பொருளாளர் அ.கோமதிநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x