

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் காமாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 5-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், 4 ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு நாக வாகன உற்சவமும் நடைபெற்றது. கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சுவாமி வீதியுலா நடைபெற்று வருவதால், மாடவீதிகள், ராஜவீதிகள் மற்றும் ராஜகோபுரத்தின் முகப்பில் வண்ண, வண்ண பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோயில் தூண்கள் கரும்புகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதுதவிர காமாட்சியம்மனை வரவேற்கும் விதமாக கச்சபேஸ்வரர் கோயில் மற்றும் சங்கரமடம் ஆகிய பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டு ரசிப்பதற்காக உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து சென்றனர். மேலும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் உற்சவத்தை காண்பதற்காக, காஞ்சிபுரம் நகருக்கு வந்து செல்வதால் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் 23-ம் தேதி இங்கு திருத்தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது.