

புதுவை சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று அரசுக்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சிகளான என்ஆர் காங்கிரஸ், அதிமுக கொறடாக்கள் தங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புதுவை சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சிகளான என்ஆர் காங்கிரஸ் வசம் 7 எம்எல்ஏக்களும், அதிமுக வசம் 4 எம்எல்ஏக்களும் என 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில் என்ஆர் காங்கிரஸ் கொறடா ஜெயபால், தன் கட்சி எம்எல்ஏக் களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “இன்று கூடும் சட்டப்பேரவை நிகழ்வில் எம்எல்ஏக்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதேபோல் அதிமுக சட்டப்பேரவை கொறடா வையாபுரி மணிகண்டனும் எம்எல்ஏக்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதில், “அதிமுக எம்எல்ஏக்கள் தவறாமல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியான காங்கிரஸ், தங்கள் அரசுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 2 எம்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என கூறி வந்தது.
இந்நிலையில் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் கொறடாக்கள் தங்கள் கட்சிகளுக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு அவரவர் கட்சி எம்எல்ஏக்களிடம் வழங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட் டுள்ளது. கொறடா உத்தரவை மீறினால் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.