

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறை யாக சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என தமி ழக பாஜக தலைவர் தமிழிசை சவுந் தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் சித்தரக் குளம் பகுதியில் மழையால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நேற்று அரிசி, பாய், போர்வை, வேட்டி, சேலை போன்ற பொருள்களை தமிழிசை சவுந்தராஜன் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 21, 22 தேதிகளில் பார்வையிட்டார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழை நீர் தேங்கியதால் இயந்திரங்கள் மூழ்கி தொழில் முடங்கியுள்ளது. இதனை நேரில் பார்வையிட்ட அமைச்சர், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்றார். அதன் அடிப்படையில் தனி சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
பாஜக குழுவினர் வெள்ள சேதம் குறித்த அறிக்கையை விரைவில் கட்சித் தலைவர் அமித்ஷாவிடம் வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் நிவாரணத் தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
தமிழக அரசு வழங்கும் வெள்ள நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பாஜக சார்பில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழிசை கூறினார்.