

வேளாண் விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடக்கும் அனைத்து வணிகத்துக்கும் சந்தைக் கட்டணம் வசூலிப்பதை தமிழக முதல்வர் நிரந்தரமாக நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மாவட்டத் தலைவர் ஞானவேலு தலைமையிலான நிர்வாகிகள் வேலூர் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.கே.அப்புவிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
அதில், ‘‘கரோனா தொற்று தீவிரமாக தொடங்கியிருந்த கடந்த 2020 ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசு வேளாண் விளைப் பொருள்கள் விற்பனைக்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தி வைத்தது.
பின்னர், மத்திய அரசு கடந்த 2020 ஜூன் 5-ம் தேதி முதல் விவசாயிகளும், வணிகர்களும் விளைப் பொருள்களை எவ்வித தடங்களுமின்றி எடுத்துச் செல்ல விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடக்கும் வணிகத்துக்கு சந்தைக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தமிழக விவ சாயிகளுக்கு முழுப் பயனை அளிப் பதுடன், வணிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடக்கும் வணிகத்துக்கு சந்தைக் கட்டணம் ரத்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் இதனை, தமிழக அரசும் முழுமையாக வரவேற்றது.
தற்போது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை உச்ச நீதி மன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், தமிழக வேளாண் விற்பனை, வணிகத் துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுச் சொல்லாத பிரிவுகளை தவறாக எடுத்துக்கொண்டு விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடக்கும் வணிகத்துக்கும் சந்தைக் கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், விவசாயிகள் தான் முதலில் பாதிக் கப்படுகின்றனர்.
அரசு கொள்முதல் செய்ய முடியாத அதிக ஈரப்பதம் உள்ள நெல், வெல்லம், நவதானியம் போன்ற இதர விளைப் பொருள்களை விவசாயிகளின் இடத்துக்கே சென்று அவர்களுக்கு எவ்வித செலவும் வைக்காமல், விவசாயிகள் விரும்பும் விலைக்கே வணிகர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால், தமிழக வேளாண் விற்பனை, வணிகத் துறை அலுவலர்கள் அவ்வாறு நடைபெறும் வணிகத்துக்கு எவ்வித சேவையும் செய்யாமல் வாகனங்களை மடக்கிப் பிடித்து சந்தை கட்டண வசூலிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது விவசாயிகள் நலன் கருதும் தமிழக முதல்வரின் கருத்துக்கு எதிரானதாகும். எனவே, அரசுக்கு அவப்பெயர் தேடித் தரும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வேளாண் விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடக்கும் அனைத்து வணிகத்துக்கும் சந்தைக் கட்டணம் வசூலிப்பதை தமிழக முதல்வர் நிரந்தரமாக நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை வேலூர் மாவட்ட வேளாண் விற் பனைக் குழு மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.