Published : 21 Feb 2021 06:11 PM
Last Updated : 21 Feb 2021 06:11 PM

கொடைக்கானல் மலையில் விளையும் கருப்பு நிற கேரட்: விவசாயியின் புதுமுயற்சிக்கு பலன் கிடைத்தது

கொடைக்கானல் மலை பாம்பார்புரம் பகுதியில் விளைந்துள்ள கருப்புநிற கேரட்

கொடைக்கானல் மலைப்பகுதியில் புதிய முயற்சியாக சீனாவில் பயிரிடப்படும் கருப்பு நிற கேரட்டை விளைவித்துள்ளார் விவசாயி ஒருவர். இதில் பலனும் கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கேரட், உருளைக்கிழங்கு, மலைப்பூண்டு மற்றும் சவ்சவ் உள்ளிட்ட காய்கறிகள் அதிக பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் கேரட் அதிக விளைச்சல் தரும் பயிராக உள்ளது. வழக்கமாக கேரட் பயிரிட்டு வரும் கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த விவசாயி ஆசிர், சீனாவில் கருப்பு நிறத்தில் கேரட் விளைவிக்கப்படுவதை பற்றி அறிந்து, அதை கொடைக்கானலில் பயிரிட வேண்டும் என ஆவல் கொண்டார்.

இதையடுத்து கருப்பு நிறகேரட்டிற்கான விதையை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆன்லைன் மூலம் கருப்பு நிறகேரட் விதைகளை பெற்றவர் கொடைக்கானல் சீதோஷ்ண நிலையை விட சீனாவில் அதிக குளிரான பிரதேஷத்தில் கருப்பு நிற கேரட் பயிரிடப்படுவதை அறிந்து இங்குள்ள சீதோஷ்ணநிலைக்கு இந்த பயிர் விளைச்சல் தருமா என்று சந்தேகம் வர, பரிசார்த்த முறையில் ஐந்து சென்ட் இடத்தில் மட்டும் கருப்பு நிற கேரட்டை பயிரிட்டுள்ளார்.

வழக்கமாக கேரட் 90 நாட்களில் விளைந்து அறுவடைக்கு வந்துவிடும். அதேபோல் கருப்பு நிறகேரட்டும் 90 நாட்களில் அறுவடைக்கு வந்தது. இதையடுத்து மண்ணுக்குள் இருக்கும் கேரட் எப்படி இருக்கிறதோ என ஆர்வமுடன் தோண்டி பார்த்தபோது, நல்லவிளைச்சல் கண்டிருந்தது.

சீனாவில் விளையும் கருப்பு நிற கேரட்டின் சுவை அதிகமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், செரிமானத்தை அதிகப்படுத்துவாகவும் இருக்கும். வழக்கமான கேரட்டை விட கூடுதல் சத்துக்கள் நிறைந்தது கருப்புகேரட். வழக்கமான கேரட்டை விட சுவை சற்று மாறுபட்டே உள்ளது.

கருப்பு நிற கேரட் அறுவடை செய்ததை அறிந்த கேரட் பயிரிடும் விவசாயிகள் பாம்பார்புரம் தோட்டத்திற்கு சென்று ஆர்வமுடன் பார்த்துச்சென்றனர். கருப்புநிற கேரட் விளைச்சல் நல்லமுறையில் இருந்ததை அடுத்து அதிகபரப்பில் பயிரிட திட்டமிட்டுள்ளார் விவசாயி ஆசிர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x