

கட்சித் தலைமை அழைப்பின்பேரில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு சென்றுள்ளனர். அதேபோல் வாக்கெடுப்பு நேர்மையாக நடத்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை ஆளுங்கட்சி நிரூபிக்க வாக்கெடுப்பு நாளை நடக்கிறது. இந்நிலையில் அதிமுக கட்சித்தலைமை எம்.எல்.ஏக்களை சென்னைக்கு அழைத்தது. இதன்படி சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன், அதிமுக கொறடா வையாபுரிமணிகண்டன், அன்பழகன், பாஸ்கர் ஆகியோர் சென்னை சென்றனர்.
அங்கு புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள் அமைச்சர் சம்பத், செம்மலை ஆகியோரின் ஆலோசனை நடத்தினர். சென்னையில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் நாளை காலையில் கிளம்பி நேரடியாக சட்டப் பேரவைக்கு வந்து வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்.
வாக்கெடுப்பு நேர்மையாக நடக்கவும், அச்சுறுத்தல் நிகழாமல் இருக்க அனைத்து எம்எல்ஏக்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில எம்எல்ஏக்கள் தங்களுக்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.