

அதிமுக கட்சியை தொடங்கிய அனகாபுத்தூர் ராமலிங்கம் குடும்பத்தை யாரும் கவனிக்காததால் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை அதிமுக தலைமை கவனிக்க வேண்டும் என உண்மை தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 1972-ம் ஆண்டு திமுக-வில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர், அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஓர் நாள் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். என்னது... இணைத்துக்கொண்டாரா? என்று கேட்டால், நீங்கள் அதிமுகவின் ஆரம்பக்கால வரலாற்றை அறியாதவர் என்றே சொல்லவேண்டும்.
ஆம்... எம்ஜிஆர் புதுக்கட்சி தொடங்கவில்லை. ஏற்கெனவே அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவுசெய்து வைத்திருந்த அதிமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். நெசவு தொழில் செய்து வந்த ராமலிங்கம் மேல்சபை உறுப்பினராகவும், அனகாபுத்தூர் நகராட்சி தலைவராகவும், கோ-ஆப்டெக்ஸ் தலைவராகவும் இருந்தார்.
ராமலிங்கத்துக்கு 2 மனைவிகள். முதல் மனைவி லட்சுமி அம்மாளுக்கு சுடர்க்கொடி, மரகத மணி, நாகம்மாள் என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மனைவி லட்சுமி இறந்த பிறகு இரண்டாவதாக சின்னம்மாள் (78) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சுப்புலட்சுமி, அண்ணாதுரை, சின்னசாமி என்ற பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது சின்னம்மாள், அனகாபுத்தூரில் தன்னுடைய மகள் சுப்புலட்சுமியின் வீட்டில் வசித்து வருகிறார். சுப்புலட்சுமியின் கணவர் இல்லாததால் தாயுடன் மூளைத்திறன் பாதிக்கப்பட்ட மகனுடன் தாயையும் கவனித்து வருகிறார். ராமலிங்கம் மேல்சபை உறுப்பினராக இருந்ததால், சின்னம்மாளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கிறது. இதில் குடும்பச் செலவுகளை மிகவும் சிரமத்துடன் சமாளித்து வருகின்றனர்.
அதிமுக கட்சியை தொடங்கிய ராமலிங்கத்தின் குடும்பம், இன்று அந்தக் கட்சியின் தலைமையால் கவனிக்கப்படாமல் இருப்பதாகவும், அதிமுக வரலாற்றைப் பேசும் கட்சியினர் இவர்களை மறந்து விட்டதாகவும், தலைமை இதை கவனிக்குமா என்றும் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழிடம் ராமலிங்கத்தின் மகள் சுப்புலட்சுமி கூறியதாவது:
அப்பா தொடங்கிய கட்சியில் எம்ஜிஆர் சேர்ந்தார். ஆனால், எம்ஜிஆர் மறைந்த பிறகு எங்கள் குடும்பத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. உதவி செய்யவும் இல்லை. என் தாய்க்கு கிடைக்கும் பென்ஷன், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட மகனுக்கு கிடைக்கும் உதவித்தொகை இவற்றை வைத்துத்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எனக்கும் என் தாய்க்கும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.
மருத்துவ செலவுக்கே இந்த தொகை போதவில்லை. அப்பா தொடங்கிய கட்சி 48 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டு, பல்வேறு முதல்வர்களையும் கண்டுள்ளது. ஆனால் கட்சி வளர்ச்சியைப் பற்றிப் பேசும் கட்சியினர், எங்களைக் கண்டு கொள்ளாதது வேதனையாக உள்ளது என்று வருத்தங்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் சிலர் கூறியதாவது:
அதிமுக என்ற பலமான கட்சியை தொடங்க காரணமாயிருந்தவர் அனகாபுதூர் ராமலிங்கம். இன்று அதிமுக ஆலமரம்போல் வளர்ந்துள்ளது. ஆனால், அதைத் தொடங்கிய ராமலிங்கத்தின் குடும்பம் வறுமைப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த ஆரம்பக்கால விவரங்கள் எல்லாம் இப்போதைய கட்சியின் தலைமை மற்றும் முக்கியப் பொறுப்புகளில் உள்ள பலருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
மேலும் அதிமுகவில் இன்று பலர் பல வகையில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் செல்வச் செழிப்பாகவும் வாழ்ந்து வருகின்றனர். அதிமுகவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மரியாதை உண்டு. அதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் பலர் இன்று இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றனர். அதில் அன்காபுத்தூர் ராமலிங்கம் குடும்பம் ஓர் உதாரணம். எனவே கட்சி மற்றும் ஆட்சியில் உள்ளவர்கள் உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.