

பாரம்பரிய நெல் விதைகள் என்பது பழைமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். அன்னமழகி, அறுபதாங் குறுவை, பூங்கார், குழியடிச்சான், குள்ளங்கார், குடவாழை, காட்டுயாணம், காட்டுப் பொன்னி, வெள்ளைக்கார், கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச் சம்பா, குருவிக்கார், கம்பஞ்சம்பா, காட்டுச் சம்பா, கருங்குறுவை, சீரகச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருத்தக்கார், காலா நமக், மைசூர் மல்லி என பல நூறு பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. ஆனால், பசுமைப் புரட்சியால் பெரும்பான்மையான பாரம் பரிய நெல் ரகங்கள் அழிந்து விட்டன.
குழந்தைகளுக்கு ஏற்ற ரகம், வளர்இளம் பெண்களுக்கு ஏற்ற ரகம், கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள், சாதத்துக்கு ஏற்ற ரகம் என பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒரு தனித்தன்மை வாய்ந்த குணமுண்டு. தற்போது இயற்கை வழி முறையில் வேளாண் செய்யும் விவசாயிகள் இப்படிப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாரம்பரிய வகைகளில் மாப்பிள்ளைச் சம்பா தனித்தன்மை மிக்கது. அந்த அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி. குறிப்பாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவக் குணங்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இது அற்புதமான உணவு மருந்து. இதன் அரிசியை வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட் டால் கிடைக்கும் ருசியே தனிதான்.
ராமநாதபுரம் மாவட்டம், எட்டிவயலில் மாப்பிள்ளை சம்பாவை கடந்த 8 ஆண்டு களாக சாகுபடி செய்து வரும் விவசாயி தரணி முருகேசன் கூறியதாவது:
ஒரு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய 4 சென்ட் அளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இரண்டரை அடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திகளுக்கு இடையில் முக்கால் அடி அகலத்தில் வாய்க்கால் அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தியில் தேவையான அளவு கன ஜீவாமிர்தத்தைப் போட்டு மண்ணைக் கொத்திவிட வேண்டும். பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்யப்பட்ட 5 கிலோ மாப்பிள்ளைச் சம்பா விதை நெல்லை விதைக்க வேண்டும்.
விதை மறையும் அளவுக்கு மண்ணைத் தூவி, வைக்கோலால் மூடாக்கு போட்டு பூவாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். 5-ம் நாள் முளைப்பு எடுக்கும். 15-வது நாள் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.
நடவு செய்த 40வது நாளில் நெற் பயிர் இரண்டரை அடி உயரம் வளர்ந்திருக்கும். அதிகப்பட்சமாக ஆறரை அடி உயரம் வரையிலும் வளரக் கூடிய மாப்பிள்ளைச் சம்பாவின் அதிகபட்ச நாட்கள் 180. 150 முதல் 165 நாட்களுக்குள் கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும்.
வறட்சி, கனமழையை தாங்கும்
நிலத்தில் தண்ணீரே இன்றி ஒரு மாதக் காலத்துக்கு நிலம் காய்ந்தாலும்கூட மாப்பிள்ளைச் சம்பா வாடாது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஏற்ற ரகம். அதுபோல கனமழையால் பல நாட்கள் நீரில் மூழ்கிக் கிடந்தாலும் மாப்பிள்ளை சம்பா அழுகாது.
இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய இந்த ரகம், பூச்சித்தாக்குதல்களாலும் எளிதில் பாதிக்கப்படாது. ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்து வதைத் தவிர்த்து, இயற்கை முறையில் சாகுபடி செய்வதே இந்த நெல் ரகத்துக்கு ஏற்றது.
ஒரு ஏக்கருக்கு 60 மூட்டை வரை நெல் கிடைக்கும். அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் லாபம் கிடைக்கும். நமது பாரம்பரிய விவசாயமும் காப்பாற்றப் படும் என்றார்.