

துணைவேந்தர் சுரப்பா மீதான முறைகேடு குறித்த விசாரணையை முடிக்க நீதிபதி கலையரசன் ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பாமீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன.இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம், 3 மாதத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் புகார் தந்தவர்களை அழைத்து ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், கடந்த நவ.11-ம் தேதி அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் காலக்கெடு பிப்.11-ம் தேதியுடன் முடிவடைந்தது. ‘சுரப்பா மீதான ஊழல் புகார்களுக்கு முகாந்திரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விசாரணையை முடிக்க மேலும் 3 மாத அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரி தமிழக அரசுக்கு நீதிபதி கலையரசன் கடிதம் எழுதியிருந்தார்.
அதையேற்று, நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு 3 மாத கால நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ‘கூடுதலாக வழங்கப்பட்ட 3 மாத காலத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, துணைவேந்தர் சுரப்பாவை நேரடி விசாரணைக்கு அழைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான சம்மன் விரைவில் அனுப்பப்பட உள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.