

தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில், கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 6-வது நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று காணொலி வாயிலாக நடந்தது. இதில் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநிலமுதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பிரதமரே பாராட்டியதுடன், தமிழகத்தின் நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மற்ற மாநிலங்களையும் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு வெளியிட்ட நல்ஆளுமை குறியீட்டில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, நாட்டில் அதிக அளவாக 16 சதவீத முதலீடுகளை தமிழகம் பெற்றுள்ளது. ஆன்லைனில் ஒற்றைச்சாளர திட்டத்தில் ரூ.22,332 கோடிக்கான புதிய முதலீடுகள் மூலம், 76,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அருகே 150 ஏக்கர் நிலத்தில் பல அடுக்கு சரக்கு பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு 453 மிகப்பெரிய தொழில் திட்டங்கள் மூலம் ரூ.4.07 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டு, 13 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தொழில் கொள்கை மூலம் மேலும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ரூ.1,418 கோடியில் பணிகள்
உழவர் உற்பத்தி நிறுவனங்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1,418 கோடியில் 6,211 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில், கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக பிரதமர் அறிவிக்க வேண்டும். ‘நமாமி கங்கை’ திட்டம்போல, தமிழகத்தில் காவிரி நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் அளித்து, நிதியுதவியும் வழங்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் 54.12 லட்சம் விவசாயிகள் ரூ.9,365 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர்.
தமிழகம் தரமான மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்பை பெற்றுள்ளதுடன், மின்மிகை மாநிலமாகவும் திகழ்கிறது. காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடத்திலும், சூரிய ஒளி மின் உற்பத்தியில் 3-வது இடத்திலும் தமிழகம் உள்ளது.
கரோனா காலத்தில் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, 4 மாத காலத்துக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக கல்லூரி மாணவர்களுக்கு தினமும்இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த பொதுமக்கள் உதவி மேலாண்மை திட்டம் மூலம்‘1100’ என்ற தொலைபேசி எண்வாயிலாக குறைகளை தெரிவித்தால் தீர்வு காணும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதம்தோறும் 10 லட்சம் மக்கள் இ-சேவைமையங்கள் மூலம் பயன்பெறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கான உயர் ஆய்வு மையம் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவ அறிவியலுக்கான சர்வதேச அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ் மருத்துவத்துக்கான நிதி உயர்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.