

எதிர்க்கட்சிகள் தேவையற்ற போராட்டங்களை தூண்டி விடுகின்றன என பாஜக தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், பாஜக தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில், பாஜக தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நலத் திட்டங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நிதிநிலை அறிக்கை வரலாற்றில் தமிழகம் கூடுதல் நிதியை பெற்றது இந்த நிதிநிலை அறிக்கையில்தான்.
மோடியின் சிறப்பான ஆட்சியை ஜீரணிக்க முடியாத எதிர்க்கட்சிகள், தேவையற்ற போராட்டங்களை தூண்டிவிடுகின்றன. டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் திட்டமிட்ட சதி.
திமுகவுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ வாக்களித்தால் தனிப்பட்ட குடும்பம்தான் நலம் பெறும். பாஜகவுக்கு வாக்களித்தால் நாடு நலம் பெறும். விவசாயம் பாதுகாக்கப்படும் என்றார்.