

கூட்டுறவு கடன் தள்ளுபடியில் திமுகவினர் அதிகமாக பயனடைந்ததாக நிரூபித்தால், அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்த தயார் என அதிமுகவினருக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார்.
திருச்சி வடக்கு, மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், சிறுகனூர் திமுக மாநாட்டுத் திடல் அருகே நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடியில் திமுகவினர் அதிகளவில் பயன்பெற்றிருப்பதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். இதை அவர்கள் நிரூபித்தால், அந்த பணத்தைகூட நாங்கள் திரும்பச் செலுத்த தயாராக உள்ளோம். உண்மையில், பல இடங்களில் அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பினாமிபெயர்களில் கடன்களைப் பெற்று,தள்ளுபடி சலுகையை அனுபவித்துள்ளனர். ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதுகுறித்த விவரத்தை வெளியிடுவோம்.
திருச்சி சிறுகனூரில் 369 ஏக்கர் பரப்பளவில் திமுக மாநில மாநாட்டுக்கான திறந்தவெளி மைதானமும், 300 முதல் 400 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளன.
ஐபேக் குழு ஆய்வு
ஐபேக் குழுவினர் நாளை மறுநாள் இப்பணிகளை பார்வையிட உள்ளனர். அதன்பின் 10 நாட்களில் இப்பணிகள் முழுமை பெறும். திமுக இதுவரை நடத்திய மாநாட்டிலேயே அதிகமான பரப்பளவில் நடப்பது இந்த மாநாடுதான்.
நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய வேண்டி இருப்பதால், திமுக மாநாட்டில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. தேர்தல் அறிவித்தாலும், திமுகவின் மாநில மாநாடு நடத்துவதில் பிரச்சினை இருக்காது என்றார்.