

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பணியாற்றிய கிரண்பேடி சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவரால் நீக்கப்பட்டார். மரபை மீறி அவர் ராஜ்நிவாஸில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்னும் தங்கியுள்ளார். இன்று அவர் புதுச்சேரியிலிருந்து புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் வடமாநிலங் களைச் சேர்ந்த 3 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்களை கொந்தளிக்க செய்துள்ளது. ஏற்கெனவே ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய அரசு, சார்பு நிறுவன ஊழியர்களை முதல்வர் குற்றச்சாட்டின்பேரில் அவர் திருப்பி அனுப்பியிருந்தார். பின்னர்பாசிக் நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலங்களைச் சேர்ந்த 3 பேரை பணிநிரந்தரம் செய்து, பிப்ரவரி 15-ம் தேதியிட்ட உத்தரவை ஆளுநர் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது. உள்ளூரைச் சேர்ந்த பல இளைஞர்கள், இளம்பெண்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலையில்,முன்தேதியிட்டு இதுபோன்று பணி நிரந்தரம் செய்யப்படுவது தினக்கூலி,பகுதிநேர ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.