

சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியின்போது ஒலி மற்றும் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுவாசிக்கும்போது உள்செல்லக்கூடிய மிதக்கும் நுண் துகள்களின் அளவு 100 மைக்ரோகிராமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தீபாவளியின்போது திருவல்லிக் கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், சவுகார் பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில் இந்த அளவு 150 மைக்ரோகிராமுக்கு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு தி.நகர் (126), நுங்கம்பாக்கம் (131) தவிர இதர பகுதிகளில் காற்று மாசு 100 மைக்ரோகிராமைவிட குறைவாக உள்ளது. இதேபோல, கந்தக டைஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு ஆகியவற்றின் அளவும் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.
ஒலிமாசுவும், கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது. திருவல்லிக்கேணியில் தீபாவளிக்கு முன்பு 66 டெசிபலாக இருந்த ஒலி மாசு, தீபாவளியன்று 81 டெசிபலாக பதிவாகியுள்ளது. பெசன்ட் நகரில் தீபாவளிக்கு முன்பு 76, பின்பு 83 டெசிபலாக பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.