

கரோனா ஊரடங்கின்போது தமிழகத்தில் 10 லட்சம் வழக்குகளை பதிவு செய்தது தவறு என, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் இன்று (பிப். 21) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
"காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தற்போது தொடங்குவதில் தவறில்லை. ஆனால், இத்திட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி, தற்போது அத்திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வரப்போகிறதே என்பதற்காக தற்போது தொடங்கப்படுகிறது. இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை. நாங்களும் ஏமாற மாட்டோம். மக்களும் ஏமாற மாட்டார்கள்.
4 ஆண்டுகள், 3 மாதங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தமிழக முதல்வர் பழனிசாமி, திடீரென விழித்தெழுந்து ஊர்ஊராக சென்று பல்வேறு திட்டங்களை தொடங்குவதாக அறிவித்து வருகிறார்.
இதேபோன்றுதான், விவசாயக் கடன் தள்ளுபடியும்கூட தேர்தலை மையமாக வைத்து செய்திருக்கிறார்கள். இவர் பதவிக்கு வந்ததுமே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அப்போதுதான், முறையான பயனாளிகள் பயன்பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய முடியும்.
தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடன் தள்ளுபடியில் உரியவர்கள் பயனடைந்தார்களா அல்லது கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளைப் போன்றுதான் இதிலும் நடைபெற்றதா என்பதை இவர்கள் எப்படி கண்டுபிடிப்பார்கள்?.
மேலும், ஒரு வேடிக்கையான செய்தி என்னவென்றால், தமிழகத்தில் கரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்து இருக்கிறார்.
இதை செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததே தவறு. மிக முக்கியத்துவம் கருதி ஒரு 10 வழக்குகள் பதிவு செய்திருக்கலாம்.
ஒருவேளை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம் என்பதற்காக 10 லட்சம் வழக்குகளை போட்டார்களா என்பதும் தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் அவரது ஆட்சியை மக்களுக்கு தருவேன் என்று முதல்வர் பழனிசாமி கூறுவது தவறு.
'ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை மறந்துவிடுங்கள். எனது தலைமையிலான ஆட்சியில் நிறைய செய்திருக்கிறேன். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைய செய்வேன்' என்று கூறி மக்களிடம் ஆதரவு கேட்பதுதான் நியாயம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.