Published : 20 Feb 2021 07:07 PM
Last Updated : 20 Feb 2021 07:07 PM

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா?- எல்.முருகன் பேட்டி

கட்சித் தலைமை முடிவு செய்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தலைவர்களின் பிரச்சாரம் என்று சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் ஒருபக்கம் நடைபெற்றாலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தான் போட்டியிடும் தொகுதியைத் தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு்ள்ளார். எல்.முருகன் கடந்த 2011-ல் ராசிபுரம் தொகுதி, 2012-ல் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவரானதால் தேர்தலில் போட்டியிடவில்லை.

தற்போது தமிழக பாஜக தலைவராக, தனக்கான தொகுதியைத் தேர்வு செய்யும் இடத்தில் இருப்பதால் அதுகுறித்துக் கட்சியினருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஸ்ரீரங்கம் அல்லது சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நாங்கள் தேர்தல் களத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். தேசியத் தலைமை நான் போட்டியிட விரும்பினால் நான் நிச்சயம் போட்டியிடுவேன். அப்போது எந்தத் தொகுதி என்றும் முடிவு செய்யப்படும்.

கூடிய விரைவில் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்'' என எல்.முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x