

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில், சுவாமி வீதியுலா செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், அந்த பகுதிக்கு 63 நாயன்மார்கள் வீதியுலா செல்லவில்லை. இதனால் வழக்கமான நடைமுறை கடைப்பிடிக்காததால் பக்தர்கள் நாயன்மார்களை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாசி மகத் திருவிழா கொண்டப்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் கொண்டாப்படும் இவ்விழா, ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதால் நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருக்கும்.
நிகழாண்டு கடந்த 17-ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களிலும், 18-ம் தேதி சக்கரபாணி கோயில் உள்ளிட்ட மூன்று பெருமாள் கோயில்களிலும் கொடியேற்றத்துடன் இவ்விழாக்கள் தொடங்கியது.
9 கோயில்களிலும் ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து கும்பேஸ்வரர் கோயிலின் நான்காம் நாள் விழாவில் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், மூர்த்தி நாயனார், மூர்க்கநாயனார், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் இரட்டை வீதியுலாவாக கும்பேஸ்வரர் கோயில் மற்றும் நாகேஸ்வரர் கோயில் வீதிகளுக்கு செல்வது வழக்கம். ஆனால் இன்று (பிப். 20) 63 நாயன்மார்களும் ஒற்றை வீதியுலாவாக கும்பேஸ்வரர் கோயில் வீதிகளை மட்டும் வலம் வந்தது.
நாகேஸ்வரர் கோயில் தெற்கு வீதி நகராட்சி நிர்வாகத்தால் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு முழுமையாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், அங்கு வீதியுலா செல்லவில்லை. இதனால் அந்த பகுதியில் 63 நாயன்மார்களும் வீதியுலா வரும் என காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதேபோல், 63 நாயன்மார்களும் சுமார் 20 படிச்சட்டங்களில் வீதியுலாவாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு 5 பட்டறைகளில் 63 நாயன்மார்களையும் அமர்த்தி ஒற்றை வீதியுலாவாக கொண்டு சென்றனர். இதனால் வழக்கம் போல், நடைபெறும் வீதியுலா இல்லாததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து, ஆதிகும்பேஸ்வரர் கோயில் பணியாளர்களிடம் கேட்டபோது, "நாகேஸ்வரர் கோயில் தெற்கு வீதி சாலை குண்டும்குழியுமாக இருப்பதால் அங்கு 63 நாயன்மார்கள் வீதியுலா செல்லவில்லை. அதே போல், நாயன்மார்களை கொண்டு செல்ல தள்ளுவண்டி சைக்கிள் ரிக்ஷா கிடைக்காததால், பட்டறைகளில் வீதியுலா நடத்தப்பட்டது" என்றனர்.
இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், "நான்காம் நாளில் 63 நாயன்மார்கள் வீதியுலா என்பது மிகச்சிறப்பு வாய்ந்தது. 63 நாயன்மார்களும் இரட்டை வீதியாக நகரை வலம் வரும்போது, பொதுமக்களும், பக்தர்களும் கண்குளிர தரிசனம் செய்வார்கள். மாசி மக விழா தொடங்குவது முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்தும், சாலையை சீரமைக்கும் பணியில் மெத்தனமாக இருந்துள்ளனர். இதனால் தான் வீதியுலா வரவில்லை. பாரம்பரியமாக நடைபெறும் இந்த வீதியுலாவை இனி வருங்காலத்திலாவது தொடர்ந்து நடத்திட வேண்டும்" என்றனர்.