ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்: வெளியானது அரசாணை

ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்: வெளியானது அரசாணை
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில் அதுகுறித்த அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய போராட்டம் ஜன.23 வரை நீடித்தது. ஆரம்பத்தில் 50 பேர் திரண்ட நிலையில் பின்னர் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். பிறகு இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.

பின்னர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. போராட்டத்தின் வீச்சைக் கண்ட தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் இயற்றி உடனடியாக அதற்கு ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்துச் சென்றனர். ஆனால் ஒருசாரர் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், எழும்பூர் எனப் பரவியது.

ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதேபோன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஆங்காங்கே மோதல், வன்முறைகள் ஏற்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 26460 பேர்கள் மீது 308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என பிப்.5 அன்று முதல்வர் பழனிசாமி பேரவையில் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில் உணர்வுபூர்வமாகப் போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தப் போராட்டங்களின்போது பதியப்பட்ட வழக்குகளில் காவலர்களைத் தாக்கியது, தீயிட்டுக் கொளுத்தியது உள்ளிட்ட வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளில் சட்டபூர்வமான ஆலோசனை பெற்று திரும்பப் பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவ்வறிவிப்பை உறுதி செய்யும் வகையில் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழக்குகள் வாபஸ் பெறுவதூறுதியாகியுள்ளது. இதற்கான அரசாணையை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in