

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வெகு விரைவில் கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறோம் என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனா வைரஸ் 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசியை இன்று (பிப். 20) போட்டுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"தமிழக முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டிலேயே சில மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்குதல் சற்று அதிகரித்த நிலையிலும், தமிழகத்தில் தொடர்ந்து கரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகவே உள்ளது.
வைரஸ் தாக்குதல் குறைவாக காணப்பட்டாலும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
மேலும், பொதுமக்கள் அனைவருமே கரோனா வைரஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று (பிப். 19) வரையில் 3.59 லட்சம் பேர் கரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை என முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனுமதியை எதிர்நோக்கியுள்ளோம்.
தமிழகத்தில் இதுவரையில் கோவிஷீல்ட் தடுப்பூசி 14.85 லட்சமும், கோவாக்சின் தடுப்பூசி 1.89 லட்சமும் வந்துள்ளது. நான் இன்று இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெறவில்லை என சிறு அச்சம் பரவலாக இருந்தது. அதனால் தான் நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். நான் நன்றாக இருக்கிறேன்.
பொதுவாகவே தடுப்பூசி என்றாலே சில தவறான தகவல்கள் பரப்பப்படுவது வழக்கமாக உள்ளது. அதை சமாளித்து தான் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் தேவையில்லை. ஒருபுறம் வைரஸ் பரவல் குறைந்து வரும் சூழலில் மறுபுறம் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும்.
வளர்ந்த நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. அங்கு தடுப்பூசியும் போடுகின்றனர். நம் நாட்டில் வைரஸ் தாக்குதல் குறைவாக உள்ள நிலையிலேயே தடுப்பூசியும் போடுவதால் அதை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
தற்போதைய நிலையில் தினந்தோறும் 10 ஆயிரம் என்ற அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி தற்போது போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவை உண்மையில்லை. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மிக கவனத்துடன் நோயாளிகளை கையாளுகின்றனர். இதனால் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. தொடக்கத்தில் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வது கொஞ்சம் சவாலாகவே இருந்தது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சுகாதாரப் பணியாளர்கள் தற்போது சிறப்பாக கையாண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து கரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் விடுபடாமல் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் வைரஸ் தாக்குதல் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா ஆகியோர் உடனிருந்தனர்.