

கனமழையால் சென்னையில் சேதமடைந்த 15 வீடுகளுக்கு நிவாரணத் தொகையை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சேத்துப்பட்டு, புல்லாபுரம், நுங்கம்பாக்கம், ஓட்டேரி, பழைய வண்ணாரப் பேட்டை, மந்தைவெளி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி பங்கேற்று, அரசின் நிவாரண உதவியாக முழுமையாக சேதமடைந்த குடிசை வீட்டுக்கு ரூ.5 ஆயிரம், பகுதி அளவில் சேத மடைந்த 13 குடிசைகளுக்கு தலா ரூ.4,100, சேதமடைந்த ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.5,200 வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் 10 கிலோ அரிசியும் வழங்கினார்.
சென்னை மாவட்டத்தில் முழுமையாக சேதமடைந்த 8 குடிசைகள், பகுதியாக சேதமடைந்த 48 குடிசைகள் என இதுவரை 56 குடிசைகளுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.