Published : 20 Feb 2021 12:21 PM
Last Updated : 20 Feb 2021 12:21 PM

காந்தி சிலை மாற்றம்; போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸார் கைது

கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட எம்.பி. ஜோதிமணி.

கரூர்

கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் காந்தி சிலை மாற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸாரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.

கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் 60 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட காந்தியின் மார்பளவு சிலை இருந்தது. ரவுண்டானாவை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், ரவுண்டானாவிலிருந்த காந்தி சிலை மாயமாகியிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸார், இது குறித்து விசாரிப்பதற்காக கரூர் நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். அங்கு மாயமான காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது

ரவுண்டானாவிலிருந்து காந்தி சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், ஒப்பந்தம், பணியானை இல்லாமல் எவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக்கேட்டு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி தலைமையில் காங்கிரஸார் மற்றும் திமுகவினர் கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் இன்று (பிப். 20) திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்தது.

எம்.பி. ஜோதிமணி நேற்றிரவு (பிப். 19) ரவுண்டானாவை பார்வையிட்டு இதற்கான பணியானையை வழங்க வேண்டும் இன்று காந்தி சிலை மீண்டும் இங்கே வைக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை ரவுண்டானாவில் தடி ஊன்றி காந்தி நடந்து செல்வதுபோன்ற புதிய ஆளுயர சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட கரூர் எம்.பி. ஜோதிமணி, "இப்பணிக்கான அரசாணையை நேற்று கேட்ட நிலையில், கடந்த 12-ம் தேதி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, வழக்கறிஞர் கருத்து பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக போலியான ஒரு ஆணை தரப்பட்டுள்ளது.

கரூர் ரவுண்டானாவில் உள்ள காந்தி சிலை மற்றும் ரவுண்டானா சேதமடைந்து உள்ளது. அதனால் கரூர் நெசவு மற்றும் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் புதிதாக காந்தி சிலை நிறுவி பராமரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான உத்தரவு, விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடாக இக்கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.

இதன் பீடம் தரமற்ற முறையில் உள்ளது. இதனை திறப்பவர்கள் மீதோ, பொதுமக்கள் மீதோ சிலை விழ வாய்ப்பு உள்ளது. மோசமாக அமைக்கப்பட்டுள்ள சிலையை தான் முதல்வர் திறக்கிறார். இது குறித்து அவரிடமே முறையிடுவேன்" என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. ஜோதிமணி

மேலும், பீடத்தை சுரண்டி சிமெண்ட் கட்டுமானம் பெயர்வதை சுட்டிக்காட்டிய எம்.பி. ஜோதிமணி இதற்கான பணியாணை உத்தரவை காட்ட வேண்டும் என வலியுறுத்தியும், முறைகேடமாக தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்தைக் கண்டித்தும் ஜோதிமணி, மாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி உள்ளிட்ட காங்கிரஸார், திமுகவினர் ரவுண்டானாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ்ஜெயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிட மறுத்து காவல் துறையினரை கண்டித்து காங்கிரஸார் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி, மாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி உள்ளிட்ட காங்கிரஸாரை போலீஸார் இழுத்துச் சென்று கைது செய்து குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது, ஜோதிமணி, முதல்வர் பழனிசாமியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றார். ஜோதிமணி உள்ளிட்ட 67 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸார் கைது செய்யப்பட்டதை அடுத்து ரவுண்டானாவில் மீண்டும் பணிகள் தொடங்கின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x