கள்ளச்சந்தையில் ரயில்வே இ-டிக்கெட்: 2 பேர் கைது, ரூ.18 லட்சம் மதிப்புள்ள 1500 டிக்கெட்டுகள் பறிமுதல் 

கள்ளச்சந்தையில் ரயில்வே இ-டிக்கெட்: 2 பேர் கைது, ரூ.18 லட்சம் மதிப்புள்ள 1500 டிக்கெட்டுகள் பறிமுதல் 
Updated on
1 min read

கள்ளச்சந்தையில் இ-டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்து, ரூ.18 லட்சம் மதிப்பிலான 1500 இ-டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்புப் படை அதிகாரிகளுக்கு ரயில்வே இ-டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து கைது செய்யும்படி இந்திய ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் அருண்குமார் உத்தரவிட்டார்.

இதன்பேரில், ஐஜி பிரேந்தி குமார் மேற்பார்வையில் உதவி ஆணையர் ராஜூ மற்றும் ஆய்வாளர் மீனா தலைமையில் திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள மைக்ரோ டிராவல்ஸ் என்ற தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் 15-க்கும் மேற்பட்ட நபர்களுடைய முகவரியை வைத்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள சுமார் 1500 இ-டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கள்ளச்சந்தையில் ரயில்வே இ-டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வினோதன் மற்றும் ஊழியர் ஹரிஹரன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவரிடமிருந்து 1500 இ-டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கணினி, இரண்டு செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டு பேர் மீதும் 143(1)(a) (தனிபர் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி மோசடி) கீழ் வழக்குப்பதிவு செய்து ரயில்வே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று மாதங்களில் இது போன்று நாடு முழுவதும் கள்ளச்சந்தையில் ரயில் இ-டிக்கெட்டுகள் விற்பனை செய்த நபர்கள் சுமார் 50 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வேயை இ- டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in