Published : 20 Feb 2021 10:40 AM
Last Updated : 20 Feb 2021 10:40 AM

இரவு வரை நீடித்த அரசு ஊழியர்கள் போராட்டம்: 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை

பல்வேறு கோரிக்கைகளை வைத்து சென்னையில் அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டம் தள்ளு முள்ளு தலைமைச் செயலகம் முற்றுகை, மறியல் என முடிந்தது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய பென்ஷனை நீக்கி பழைய பென்ஷனை கொண்டுவர வேண்டும், ஊதிய உயர்வு, அசுட் சோர்ஸ் முறையில் எடுப்பதை தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து கோட்டை நோக்கி பேரணிச் சென்ற அரசு ஊழியர்கள் போராட்டம் தள்ளு முள்ளுவாக மாறி கோட்டை முற்றுகை, மறியல் என நீண்டது. இதில் 73 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கள் கோரிக்கையை அரசு அதிகாரிகள் பெற்று பரிசீலிக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்தினர் உறுதியாக இருந்ததால் அவர்களை அரசு உயர் அலுவலர் சொர்ணா சந்தித்தார்.

பின்னர் இரவு 8-40 மணி அளவில் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்துச் சென்றனர். இதில் போராட்டம் நடத்தியவர்களில் சுமார் 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

“நேற்று காலை 11.30 மணி முதல் அரசு ஊழியர் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் மு.அன்பரசு தலைமையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம் நடத்தி வந்தவர்கள் 1.50 மணியளவில் தலைமைச் செயலகம் முற்றுகையிட காவலர் பேரிகாட்டுகளை தள்ளிவிட்டு சுமார் 150 நபர்கள் தலைமைச் செயலகம் நோக்கி காமராஜர் சாலை வழியாக ஓடி சென்றனர்.

அவர்ளை திருவல்லிக்கேணி துணை ஆணையர் நேப்பியர் பாலம் அருகே தடுத்து நிறுத்தியும் நிற்காமல் பேரிகார்டுகளை தள்ளிக் கொண்டு தலைமைச் செயலகம் நோக்கி ஓடிச்சென்றனர். அவர்களை கிழக்கு மண்டல இணை ஆணையர் தலைமையிலான போலீஸார் தீவுத் திடல் அருகே தடுத்து நிறுத்தி அன்பரசு தலைமையிலான நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதையும் மீறி சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கோட்டை நோக்கி சென்று முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்த மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான போலீஸார் கைது செய்து புதுசுரங்குடி மண்டபம், சென் சேவியர் தெரு சமுதாயக்கூடம், அண்ணா பிள்ளை தெரு சமுதாயக் கூடம், என மொத்தம் சுமார் 73 பேரை கைது செய்து தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மற்ற நபர்கள் சிறிது சிறிதாக ஆர்ப்பாட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தனர். போராட்டக்காரர்கள் வாலாஜா சாலை இருபுறமும் ஆக்கிரமித்து சாலையில் அமர்ந்திருந்தனர். இதில் அன்பரசன் தலைமையிலான 20 நிர்வாகிகளிடம் தீவுத்திடல் அருகே போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவல்லிக்கேணி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மாலை 4.35 மணியளவில் தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன் கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசன், பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்களை போலீஸார் தலைமைச் செயலகம் அழைத்துச் சென்றனர். அங்கு தலைமைச் செயலகம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் சொர்ணாவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாலை 6.50 மணியளவில் ஆர்பாட்ட பகுதிக்கு நிர்வாகிகள் வந்தனர். அதை தொடர்ந்து கைது செய்து வைக்கப்பட்டிருந்த 73 நபர்களும் விடுதலை செய்யப்பட்டு ஆர்பாட்ட பகுதிக்கு வந்ததையடுத்து தங்கள் போராட்டத்தை இரவு 8.40 மணிக்கு முடித்து அனைவரும் கலைந்து சென்றனர்.

போராட்டம் தொடர்பாக 300 பெண் ஊழியர்கள் உட்பட 700 அரசு ஊழியர்கள் மீது போலீஸார் ஐபிசி பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 188 (அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மதிக்காமல் இருத்தல்), 353 (அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல்), தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் 269 (உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பக்ககூடிய செயலில் ஈடுபடுதல்). ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் வருகிற பிப்.23-ம் தேதி தமிழக அரசையும் காவல் துறையையும் கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர், தங்கள் சங்கம் சார்பில் செயற்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்”.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x